Tamil News
Tamil News
Tuesday, 13 Jun 2023 00:00 am
Tamil News

Tamil News

அண்ணாமலை VS எடப்பாடி 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டது. சி.டி.ஆர்.நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததையடுத்து, அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மீது கோவம் இருந்து வந்தது. இதைவைத்து அதிமுகவை பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார் அண்ணாமலை. இதையடுத்து, கூட்டணி பற்றி முடிவெடுப்பது நீங்கள் அல்ல, மேலே இருப்பவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுத்து வந்தார். 

எங்களுக்குள் மோதல் இல்லை

இந்தநிலையில், கடந்த மாதம் டெல்லியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருசில அமைச்சர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே உள்ள கருத்து மோதலை தீர்த்து வைத்தார் அமித்ஷா. இதையடுத்து, அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தவித மோதலும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார், 

அண்ணாமலை விமர்சனம்

இந்தநிலையில், அதிமுக மற்றும் அண்ணாமலைக்குமான மோதல் மறுபடியும் தொடங்கி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அண்ணாமலை பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக பேசியிருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த எந்த ஒரு கட்சியையும் நான் சொல்கிறேன். அது எல்லாக் கட்சிக்கும் பொருந்தும்" என்றார். 

அதேபோல், 1991-96 வரையில் இருந்த அதிமுக ஆட்சி ஊழல் குறித்து மிகவும் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றிய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அண்ணாமலை, இங்கே இருக்கும் ஆட்சி எல்லாமே ஊழல் செய்யும் ஆட்சியாகத்தான் உள்ளது. முன்னாள் முதல்வரே ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஜெயலலிதா குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

மீண்டும் தொடங்கிய அதிமுக அண்ணாமலை மோதல்

அண்ணாமலையின் இந்த பேட்டிதான் அதிமுகவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வெண்டும். இது மாதிரி தொடர்ந்து பேசினால் கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்வோம் என மிக காட்டமாக பேசியிருந்தார். 

சிவி சண்முகம் காட்டம்

இந்தநிலையில், இன்று ஜூன் 13-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, "புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் அண்ணாமலை. அண்ணாமலை மீது அவருடைய கட்சியை சார்ந்தவர்களே ஊழல் குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறார்கள். 

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் யாரையும் நேரில் சென்று பார்த்ததில்லை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், உங்களுடைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும் அம்மா அவர்களை போயஸ் கார்டனில் நேரில் வந்து சந்தித்தவர்கள். அப்படிப்பட்ட ஆளுமைமிக்க தலைவர் அம்மா அவர்களைப் பற்றி பேசுவதற்கு இந்த முன்னாள் போலிஸ் அதிகாரிக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை. அதுவும் ஊழலைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கும், தமிழக பாஜகவுக்கும் அருகதையே கிடையாது. 

இன்றைக்கு இந்தியாவில் ஊழல் நடைபெற்றதற்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர். அதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏனென்றால் அவர் அப்போது அவர் கட்சியில் இல்லை. அப்போது அவர் எங்கேயோ மாமூல் வாங்கி கொண்டு இருந்திருப்பார். உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற இவர்களுடைய முன்னாள் கர்நாடகா முதலமைச்சர். 

அஇஅதிமுக தான் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம், அதனுடனான கூட்டணி தொடரும், இது பாரத பிரதமருடைய விருப்பம். இது எங்களுக்காக சொன்னது அல்ல, அண்ணாமலையை வைத்துக்கொண்டு அவருடைய தலையிலே கொட்டுவது போல அவர்கள் சொன்ன வார்த்தை. வீரமும் ஆண்மையும் உள்ள அண்ணாமலை அன்றைக்கு டெல்லியில் உங்களையும் எங்களையும் வைத்துக்கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று சொன்னபோது அன்றைக்கு எங்கே போய் வாய் வைத்துக் கொண்டிருந்தீர்கள்" என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.  

ஜெயக்குமார் பதிலடி

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, "அம்மாவைப் பற்றி விமர்சனம் செய்த அண்ணாமலைக்கு ஏற்கனவே எதிர்வினை ஆற்றியாச்சு. தொடர்ந்து விமர்சித்தால் பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.