Tamil News
Tamil News
Monday, 12 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

அதிமுகவினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதற்கு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை பேச்சு

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அண்ணாமலை பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக பேசியிருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த எந்த ஒரு கட்சியையும் நான் சொல்கிறேன். அது எல்லாக் கட்சிக்கும் பொருந்தும் என்றார். 

அதேபோல், 1991-96 வரையில் இருந்த அதிமுக ஆட்சி ஊழல் குறித்து மிகவும் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றிய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அண்ணாமலை, இங்கே இருக்கும் ஆட்சி எல்லாமே ஊழல் செய்யும் ஆட்சியாகத்தான் உள்ளது. முன்னாள் முதல்வரே ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஜெயலலிதா குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

அதிமுகவினர் கண்டனம்

இதையடுத்து, அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். அண்ணாமலையின் கருத்துக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு, பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாராயணன் திருப்பதி கண்டனம்

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அ தி மு க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கண்டித்து தீர்மானம் இயற்றியிருப்பது ஏற்க இயலாதது, கண்டனத்திற்குரியது.ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்தும், தமிழகத்தில் உள்ள ஊழல் அமைப்பு குறித்தும் விரிவாக குறிப்பிட்டிருந்த நிலையில், கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டியது எப்படி அவதூறான கருத்தாகும்? நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிடுவது எப்படி உள்நோக்கம் கொண்டதாக அமையும்? பேட்டியின் பொருளை உணராமல், அதிலிருந்து  ஒரு சில வரிகளை மட்டுமே எடுத்து கொண்டு அவர் மீது தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவது தான் உள்நோக்கம் கொண்டதாக கொள்ளப்படும். 

தோழமை உணர்வோடு தீர்மானத்தை திரும்ப பெறுவது நலம்

நேர்மை, நாணயம், கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய நன்னடைத்தைகளை ஒருங்கே பெற்றவர் திரு. அண்ணாமலை அவர்கள்.அறிவினாலோ, வயதினாலோ, அனுபவத்தினாலோ வருவது அல்ல முதிர்ச்சி. நல்ல எண்ணத்தினாலும், தெளிவான சிந்தனையாலும், நேர்மையான நடத்தையாலும் காணப்படுவதே முதிர்ச்சி. இவை அத்துனையும் கொண்டவர் எங்கள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள். ஆனால், அவரை முதிர்ச்சியற்றவர் என்று சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.நல்ல நோக்கம் கொண்ட இளம் தலைவரை உள்நோக்கம் கொண்டு பேசுவதாக சொல்வது முறையல்ல. தோழமை உணர்வோடு தீர்மானத்தை திரும்ப பெறுவது நலம்" என்று குறிப்பிட்டுள்ளார்.