Tamil News
Tamil News
Tuesday, 13 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

வருமான வரித்துறை சோதனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டு நாட்கள் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனையானது கரூர் சென்னை மற்றும் மற்ற மாநிலங்களிலும் நடைபெற்றது. வருமான வரித்துறை சோதனை முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

அமலாக்கத்துறை சோதனை

இதையடுத்து, வருமான வரித்துறை சோதனையின் தொடர்ச்சியாக, நேற்று ஜூன் 13-ம் தேதி காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னையில் உள்ள வீட்டிலும், பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டிலும் சோதனை

வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு மேல் சோதனை நடத்திய நிலையில், நேற்று அவரது இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 11-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்திருந்தார். அப்போது அவர் வரும் வேளையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து, அந்த சம்பவம் மிகவும் பேசுபொருளானது. மேலும், மேடையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2G,3G,4G என குறிப்பிட்டு பேசியிருந்தார். அதில் ஒரு G செந்தில் பாலாஜி தான் என்று டெல்லியில் உள்ள அரசியல் நோக்கர்கள் தனியார் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு தெரிவித்திருந்தனர். 

இந்தநிலையில் நேற்று காலை முதல் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலக அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமைச் செயலக அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதற்கு அகில இந்திய தேசிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தநிலையில், இன்று அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விசிக தலைவர் திருமாவளவன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது, திடிரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று சந்தித்தனர். 

மிசாவையே பார்த்துட்டோம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக அரசின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது, திராவிட முன்னேற்றக் கழகம் மிசாவையே பார்த்தது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என தெரிவித்தார். 

இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது - ஸ்டாலின்

இதையடுத்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர், நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சென்று சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு, பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது, 

"விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

அமைச்சர் பதவி பறிபோகிறதா?

மேலும், மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது போன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்ச மாட்டோம் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்திருக்கிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது துறை வேறு யாரிடமும் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சராக இருப்பவரை கைது செய்யும் போது ஆளுநரிடமும். எம்.எல்.ஏ என்ற முறையில் சபாநாயகரிடமும் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.