Tamil News
Tamil News
Wednesday, 14 Jun 2023 00:00 am
Tamil News

Tamil News

8 நாட்கள் நடந்த சோதனை

மதுவிலக்கு மற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்ட நிலையில், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

முதலமைச்சர் அவசர ஆலோசனை

இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்த நிலையில், எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் குவிப்பு

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலியாக கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைபோல அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஆட்கொணர்வு மனு தாக்கல் 

இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு மீது பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பை பாஸ் சர்ஜரி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது பின் நிகழும் அடுத்தடுத்த திருப்பங்களால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.