Tamil News
Tamil News
Tuesday, 13 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜகவின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதுக்குறித்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக்கொண்டு இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு கொடுத்தது அனைத்தும் கண்ணீரும், அடக்குமுறைகளும் தான். இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக தலைமை. 

மாநிலங்களில் நடந்த பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாகத் தோற்று வருவதும், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டிவரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்த செல்வாக்கும் இல்லாத அரசாங்கமாக ஒன்பதாவது ஆண்டில் மொத்தமாக தேய்ந்துவிட்டது பாஜக ஆட்சி. எனவே நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை விட்டு இறங்குவது மட்டுமல்ல, எதிர்பாராத படுதோல்வியை அடையப் போகிறோம் என்பதை பாஜக தலைமை உணர்ந்துவிட்டது. எனவே, தனக்கு எதிரான ஜனநாயக சக்திகளின் பலத்தைக் குறைப்பதன் மூலமாக வெற்றியை அடையலாமா என்ற இறுதித் தந்திரத்துக்குள் பாஜக தலைமை இறங்கி உள்ளது. 

இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச்சேர்க்கையான நாளாக ஜூன் 23ம் நாள் குறிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவும், கட்சிகளின் உறுதியை குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது. அதனை அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலனாய்வு விசாரணை அமைப்புகளை குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் மீது பயன்படுத்தாமல் தன்னுடைய அரசியல் எதிரிகள் மீது பாஜக பயன்படுத்தி வருவதை ஊடகங்கள் புள்ளி விபரங்களுடன் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பாஜக தலைமை திருந்தவில்லை. வெளிப்படையாக, ஆணவமாக முறையில் விசாரணை அமைப்புகளை அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்திவருகிறார்கள். 

எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்டது. தமிழ்நாடு என்பது பாஜகவை பின்னங்கால் பிடறியில் அடிபட விரட்டும் மாநிலம். இங்கு அவர்களால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, தனியாக நின்று டெபாசீட்கூட வாங்கமுடியாது என்பது தெரியும். அதனால் தான் நேர்வழி இல்லாமல் நேர்மையற்ற வழிகளில் பாஜக தனது கீழான செயல்களைச் செய்கிறது. 

மாண்புமிகு மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றைய தினம் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்துள்ளார்கள். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள். விசாரணைக்கு அமைதியாக ஒத்துழைப்புத் தந்தவரையே, இந்தளவுக்கு வேண்டுமென்றே தொல்லையும், நெருக்கடியும் கொடுத்திருப்பது பழிவாங்குவதே தவிர விசாரணை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை அதுவும் அமைச்சரைச் சித்திரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத்துவது அரசியலேத் தவிர, விசாரணை அல்ல. 

மேலும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்திற்குள் மத்திய பாதுகாப்புப்படை போலீசாரை, அழைத்துவருவது தான் மாநில ஆட்சியின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும் எப்போதும், நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவப்போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா? மிரட்டுகிறார்களா? இவை எதற்கும் பயப்படுகிறவர்கள் அல்ல நாங்கள். 

மூன்று நாட்களுக்கு முன்னால்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னைக்கு வந்து சென்றார். அவரது பயண நோக்கமும், பிரச்சாரக் கூட்டமும் படுதோல்வி என்பதை அனைவரும் அறிவார்கள். இதனை மறைப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கையை பாய்ச்சி இருக்கிறார்கள். செராபுதீன் என்கவுண்டர் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தவுடன் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்துகொண்டே தலைமறைவானவர் அமித்ஷா என்பதை நாடு மறக்கவில்லை. 

‘Don't create atmosphere of fear' என்று சில வாரங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எச்சரித்து இருந்தார்கள். இப்படி உச்சந்தலையில் உச்சநீதிமன்றம் கொட்டிய பிறகும் பாஜகவின் அமலாக்கத்துறை திருந்துவதாகத் தெரியவில்லை. திருத்தும் கடமையும் பொறுப்பும் நாட்டுமக்களே உண்டு. 

பாஜகவின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளை கண்டித்து கோவை மாநகர் சிவானந்தா காலனியில் 16-06-2023 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5 மணி அளவில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும். பாஜகவிற்கு இறுதி தோல்வியை தரும் வரையில் நமது மக்கள் பிரச்சாரம் தொடரும்” என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிட் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.