Tamil News
Tamil News
Tuesday, 13 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அகில இந்திய தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வழியால் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

முதலமைச்சர் ஆலோசனை

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் அமைச்சர் எ.வ.வேலு, கே.என். நேரு, சி.வி. கணேசன், மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், திமுக வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட திமுகவின் மூத்த வழக்கறிஞர் இளங்கோ சென்றுள்ளார். அமலாக்கத்துறை விசாரணையில் மனித உரிமை மீறல் என முறையிடவும் திமுக முடிவு செய்துள்ளது. 

செந்தில் பாலாஜி மனைவி மனு தாக்கல்

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி மனைவி. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக மனுவில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா குற்றம் சாட்டியுள்ளார். அவரச வழக்காக விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிடவும் முடிவு செய்துள்ளார்கள். 

செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த முதலமைச்சர் 

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒருசில அமைச்சர்கள் சென்று நலம் விசாரித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு, வழக்கை சட்டரீதியாக உறுதியுடன் திமுக எதிர்கொள்ளும் என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். "எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் உறுதியாகத் தொடர்வோம் என்றும், மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய பிறகும் நெஞ்சு வலி வருமளவு நெருக்கடி கொடுத்திருப்பதாக முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். 

வேறு மருத்துவமனைக்கு மாற்றம் 

இந்தநிலையில், ஓமந்தூரார், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையால், அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீதிபதி விலகல்

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளநிலையில், அந்த விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்ய வியூகம் வகுக்கும் அமலாக்கத்துறை

நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி அறையில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாவிட்டால் மருத்துவமனையில் கைது செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.