Tamil News
Tamil News
Tuesday, 13 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

செந்தில்பாலாஜி கைது

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். கடந்த 8 நாட்களாக நடந்த சோதனையை அடுத்து கரூர் மற்றும் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இது அரசியல் வாட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

தீவிரசிகிச்சை பிரிவில் அமைச்சர்

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பை பாஸ் சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். 

பாஜகவுக்கு அஞ்சமாட்டோம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர். இந்நிலையில் செய்தியாளார்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் மிரட்டல் அரசியலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை

அதேபோல், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல பல வேலைகளை மத்திய அரசு செய்யும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை பயன்படுத்திக்கொள்வதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துகள் என்று கூறினார்.

பழிவாங்கும் நடவடிக்கை

மேலும் அமைச்சர் பொன்முடி கூறுகையில், ’பா.ஜ.க ஆளாத மாநிலங்களின் ஆட்சியை பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. டெல்லி, மேற்குவங்கம், கர்நாடாகாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசு இதை செய்திருக்கிறது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்வோம்’ என்றார். நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க நெருக்கடிகளை கொடுத்துவருகிறது என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.