Tamil News
Tamil News
Tuesday, 13 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் ஊழல் குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் என்றும், இதனால் தான் தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உள்ளிட்டோர் கடுமையான கண்டங்களை பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக அதிமுகவின் இடைக்காலப் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் 

அதனுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோரும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். தமிழகத்தில் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அண்ணாமலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

கருத்து திரிக்கப்பட்டுள்ளது - அண்ணாமலை

இந்நிலையில், அண்ணாமலைக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், தமிழக பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், அண்ணாமலை கூறிய கருத்து திரித்து பரப்பபட்டுள்ளதாகவும், அதிமுகவினர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், யாரையும் இழிவுபடுத்தும் நோக்கில் தான் பேசவில்லை என்றும் அதேசமயம் கூட்டணிக்கட்சிகள் நினைப்பதை தான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. 

ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை

அண்ணாமலையின் இந்த கருத்தை அதிமுகவினர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வந்தனர். தற்போது இது தொடர்பாக அண்ணாமலை, கருத்து கூறியுள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். ஒரு பெண்ணாக அவர் திமுகவை எதிர்கொண்டு வளர்ந்து வந்த விதம் குறித்து பல முறை நான் பேசி உள்ளேன். அவருடைய பெயரை எங்குமே நான் குறிப்பிடவில்லை. நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழலில் மூழ்கி உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆட்சியை கடந்து ஊழல் பிரச்சினையாக உள்ளது என்று தான் பேசினேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.