Tamil News
Tamil News
Wednesday, 14 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து பணம் பெற்றதாகவும் அப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

நள்ளிரவில் கைது

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக ஜூன் 13ம் தேதி காலை வரை மொத்தம் 8 நாட்கள் நடந்த தொடர் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். வங்கிக் கணக்குகளை சோதனையிட்டதில், வருமானவரிக் கணக்கில் தாக்கல் செய்யப்பட்ட  விவரங்களுடன் இது கூடுதலாக இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் மோசடி

மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு உரிய தேர்வு நடைமுறைகளை  பின்பற்றாமல் பெற்ற பணத்தை செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும் அதற்காக தான் கைது செய்துள்ளதாகவும்,  அமலாக்கத்துறை கூறியுள்ளது. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களின் முன்னாள் நிர்வாக இயக்குநனர்களுடன் சேர்த்து செந்தில் பாலஜியின் சகோதரர் ஆர்.வி. அசோக்குமார், எம்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல முறை ஆஜராகவில்லை

மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த இந்த வழக்குகளின் தன்மையை  கருத்தில் கொண்டு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டதின் 2(1)(u), 2 (1) ( v) மற்றும் 3 ஆகிய பிரிவுகளில் அமலாகத்துறையால் 2021ம்  ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின்படி, 2022ம் ஆண்டில்,  வழக்கு தொடர்பான விசாரணைக்காக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், ஒரு முறைகூட ஆஜராகவில்லை  என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

10 ஆண்டு சிறை

செந்தில் பாலாஜி மீது 2015, 2017, 2018ம் ஆண்டுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளில் உள்ள பிரிவுகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் அட்டவணையில் பார்ட் ஏ-ல் வருவதால்,  அதிகபட்சமாக  அவருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.