Tamil News
Tamil News
Thursday, 15 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

இலாகா மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்பிய ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 

ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதால், அவருடைய இலாகாவை மாற்றுவது தொடர்பாக, நேற்றைய தினம் ஜூன் 15-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவருடைய துறைகளான மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறையை முத்துசாமிக்கும் மாற்றம் செய்ய பரிந்துரைக்குமாறு கடிதம் எழுதியிருந்தார். 

திருப்பி அனுப்பிய ஆளுநர்

அந்தக் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியநிலையில், மீண்டும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் எழுதிய கடிதம் திசை திருப்பும் வகையில் தவறாக இருந்ததாகவும், பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை Misleading & Incorrect என ஏற்க மறுத்து, முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பிருந்தார்.

மீண்டும் ஆளுநருக்கு கடிதம்

இதையடுத்து, துறைகள் மாற்றத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியமில்லை, மரபு கருதி கடிதம் எழுதப்பட்டது என்றும், முதலமைச்சர் கடிதம் குறித்து ஆளுநர் தவறான தகவல் தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவின் முகவர் போல ஆளுநர் செயல்படுவதாகவும், செந்தில் பாலாஜியை நீக்க கடந்த மே 31ம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியது ஏன்? எனவும் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, துறைகளை மாற்றி இருப்பதாக ஆளுநருக்கு மீண்டும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

வைகோ காட்டம்

இந்தநிலையில், ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவையில் "ஆளுநர் ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான, தான் தோன்றித்தனமான காரியங்களைச் செய்து வருகிறார்" என்று ஆளுநரை கடுமையாக பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

"ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான, தான் தோன்றித்தனமான காரியங்களைச் செய்கின்ற ஒரு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற பெயரிலே இங்கே வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் தான் யாரை எந்த இலாக்காவில் அமைச்சராக்க வேண்டும் என்பதை அரசியல் சாசன சட்டம் தெளிவாக சொல்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து, இலாகா மாற்றம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதை திருப்பி அனுப்பியது அதிக பிரசங்கித்தனமானது மட்டுமல்ல, அயோக்கியத்தனமானது. தமிழகத்தின் அமைதியை சீர்குலைப்பதற்காக பாஜகவினுடைய ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தப் பிரச்னையைத்தான் பெரிதாக பேசப்போகிறேன். மக்கள் தேர்ந்தெடுத்தது மு.க.ஸ்டாலினைத்தானே தவிர, ஆர்.என்.ரவியை அல்ல. அவர் மத்திய அரசின் வேலைக்காரர், ஒரு ஊழியக்காரர், ஒரு ஏஜெண்ட், அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல, அதை அவர் மறந்துவிடக்கூடாது. ஒன்றிய அரசாங்கம் இதியாவையே கைப்பற்ற நினைக்கிறார்கள். ஜனநாயகத்திற்கு விரோதாமாக நரேந்திர மோடி அரசு நிலைநாட்ட முயற்சிக்கிறது, அதிலே அவர்கள் தோற்றுப்போவார்கள்" என்று பேசியிருக்கிறார்.