Tamil News
Tamil News
Thursday, 15 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

இலாகா மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை திருப்பி அனுப்பிய ஆளுநரை, ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதால், அவருடைய இலாகாவை மாற்றுவது தொடர்பாக, நேற்றைய தினம் ஜூன் 15-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவருடைய துறைகளான மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறையை முத்துசாமிக்கும் மாற்றம் செய்ய பரிந்துரைக்குமாறு கடிதம் எழுதியிருந்தார். 

திருப்பி அனுப்பிய ஆளுநர்

அந்தக் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியநிலையில், மீண்டும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் எழுதிய கடிதம் திசை திருப்பும் வகையில் தவறாக இருந்ததாகவும், பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை Misleading & Incorrect என ஏற்க மறுத்து, முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பிருந்தார்.

ஆளுநருக்கு மீண்டும் முதலமைச்சர் கடிதம்

இதையடுத்து, துறைகள் மாற்றத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியமில்லை, மரபு கருதி கடிதம் எழுதப்பட்டது என்றும், முதலமைச்சர் கடிதம் குறித்து ஆளுநர் தவறான தகவல் தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவின் முகவர் போல ஆளுநர் செயல்படுவதாகவும், செந்தில் பாலாஜியை நீக்க கடந்த மே 31ம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியது ஏன்? எனவும் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, துறைகளை மாற்றி இருப்பதாக ஆளுநருக்கு மீண்டும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

திருமா கேள்வி

ஆளுநர் செயலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். "அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார் ? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது" என்று தெரிவித்துள்ளார்.