Tamil News
Tamil News
Thursday, 15 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா மாற்றம் தொடர்பாக இரண்டாவது முறையாக பரிந்துரை கடிதத்தை அனுப்பியும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்திருக்கிறார். 

இலாக்கா மாற்றம் - முதலமைச்சர் கடிதம்

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதால், அவருடைய இலாகாவை மாற்றுவது தொடர்பாக, நேற்றைய தினம் ஜூன் 15-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவருடைய துறைகளான மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறையை முத்துசாமிக்கும் மாற்றம் செய்ய பரிந்துரைக்குமாறு கடிதம் எழுதியிருந்தார். 

திருப்பி அனுப்பிய ஆளுநர்

அந்தக் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியநிலையில், மீண்டும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் எழுதிய கடிதம் திசை திருப்பும் வகையில் தவறாக இருந்ததாகவும், பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை Misleading & Incorrect என ஏற்க மறுத்து, முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பிருந்தார்.

மீண்டும் கடிதம்

இதையடுத்து, துறைகள் மாற்றத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியமில்லை, மரபு கருதி கடிதம் எழுதப்பட்டது என்றும், முதலமைச்சர் கடிதம் குறித்து ஆளுநர் தவறான தகவல் தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவின் முகவர் போல ஆளுநர் செயல்படுவதாகவும், செந்தில் பாலாஜியை நீக்க கடந்த மே 31ம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியது ஏன்? எனவும் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, துறைகளை மாற்றி இருப்பதாக ஆளுநருக்கு மீண்டும் முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். 

இலாகா இல்லாத அமைச்சர்

ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்வரே அமைச்சரவையை மாற்றலாம் என்றும், அதனடிப்படையில் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் இன்று காலையில் தகவலானது வெளியானது. 

முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மீண்டும் மறுப்பு

இந்தநிலையில், முதலமைச்சர் இரண்டாவது முறையாக அனுப்பிய பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது எனக்கூறி முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும், செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை அமைச்சர்கள் முத்துசாமிக்கும், தங்கம் தென்னரசுவிற்கும் கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.