Tamil News
Tamil News
Monday, 19 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணை என்பது பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது என்றும், சட்டம் அதன் கடமையைச் செய்துள்ளது என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை ராயப்பேட்டை அமமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு நடைபெற்றது. இதில் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

நெஞ்சுவலி திமுகவுக்கும்தான்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “செந்தில் பாலாஜி விசயத்தில் சட்டம் அதன் கடமையைச் செய்யும். செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதை கேட்டு வருத்தம் அடைந்தேன். அமலாக்கத்துறை விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது. தனது வேலையை தான் செய்து வருகிறது.  செந்தில்பாலாஜி துறுதுறுவென இருப்பவர். ஆர்.கே.நகரில் நான் வெற்றி பெற்றபோது முன்னதாகவே என் வெற்றியை கணித்தவர். அமலாக்கத்துறை சோதனையை செந்தில்பாலாஜி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அவர்களிடம் பொய் சொல்ல முடியாது. நெஞ்சுவலி செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கும்தான்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்

பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் நல்ல கருத்தை எடுத்து சொல்வதை பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று சொல்வது சரிதான். விஜய் இத்தகைய விஷயத்தை சொல்வது நிறைய மக்களை சென்றடையும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க நம்முடன் இணைந்தவர்கள் இப்போதும் நம்முடன் தான் இருக்கிறார்கள். ஒருசிலர் தான் சுயநலத்தாலும், குழப்பத்தாலும் நம்மை விட்டு சென்று இருக்கிறார்கள். தெளிந்த சிந்தனையுடன் உள்ள தொண்டர்கள் என்னுடன் இருக்கும்வரை நான் என் முயற்சியை கைவிட மாட்டேன்” என்றார்.