Tamil News
Tamil News
Monday, 19 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுர அடி பரப்பில் ரூ 12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் 

கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, அவரது பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், திருமண மண்டபங்கள் உள்ளன. திறப்பு விழாவில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;- "மன்னர்கள் கூட தாங்கள் ஆளும் போது தான் கோட்டமும், கோட்டையும் கட்டுவார்கள். ஆனால் கலைஞரின் மறைவுக்குப் பிறகு இங்கு கோட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதன் அடையாளமாகத் தான் இந்த கோட்டம் இங்கு அமைந்திருக்கிறது.

பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது கேடு

'தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேர்வது போல் திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிறகும் மருத்துவமனையாக, நூலகமாக, கோட்டமாக பயணித்துக் கொண்டிருப்பவர் கலைஞர். அவரை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர். அறிஞர் அண்ணாவை கருணாநிதி முதன்முதலில் சந்தித்தது திருவாரூரில் தான்."  பாஜக 10 ஆண்டுகளாக பரப்பி வரும் காட்டுத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான வேலையை பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கியுள்ளார். நானும் உங்கள் அன்போடு பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்கிறேன். பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய எதிர்காலத்திற்கும் அது கேடாக முடியும். 

நீங்கள் அனைவருமே கலைஞரின் பிள்ளைகள் 

மதசார்பற்ற கட்சிகள் அகில இந்திய அளவில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதற்கு முன்னோட்டமாகத் தான் பீஹாரில் நடைபெறும் கூட்டம் அமையவிருக்கிறது. நாம் ஒருதாயின் மக்கள் அந்த உணர்வோடு கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம். கலைஞருக்கு நான் மட்டும் மகனல்ல நீங்கள் அனைவருமே கலைஞரின் பிள்ளைகள் தான். இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். நாற்பதும் நமதே! நாடும் நமதே! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.