Tamil News
Tamil News
Tuesday, 20 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழகத்தில் நாளை ஜூன் 22-ம் தேதி முதல் 500 மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 

500 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடல்

தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் உடனடியாக மூடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் 138 கடைகள் மூடல்

இதன்படி, 500 கடைகளை நாளை முதல் (22.6.2023) மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் (22.6.2023) செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதல் கையெழுத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து, அவருடைய மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, வீட்டு வசதி மற்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியின் முதல் கையெழுத்தாக 500 கடைகள் மூடுவதற்கு உத்தரவிட்டிருக்கிறார்.  

தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. "இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.