Tamil News
Tamil News
Tuesday, 20 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிடக்கோரிய மனுவில், சட்டம் ஒழுங்கு பிரச்னை இருப்பதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலை திறக்கக்கோரி வழக்கு
 
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலுக்குள் குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கவில்லை என்று எழுந்த பிரச்னையை அடுத்து அந்தக் கோவிலுக்கு கடந்த ஜூன் 07-ம் தேதி சீல் வைக்கப்பட்டது. கோவில் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்தும், கோவிலை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், விழுப்புரம் மாவட்டம் கரிபாளையத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 சீல் வைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை

அந்த மனுவில், கோவிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை எனவும், தீண்டாமை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட பொதுமக்கள் இல்லாமல் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கோவிலில் தினசரி பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ஆகமத்தை மீறும் வகையில் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு சீல் வைப்பதை தவிர்த்து, பொதுமக்களை அனுமதிக்காமல் பூஜைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, கோவிலுக்கு சீல் வைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வாதம்

இதையடுத்து, தமிழக அரசு சார்பில், கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அறநிலைய துறை கோவிலுக்கு தக்காரை நியமித்த போதும், அவரால் பொறுப்பேற்க முடியவில்லை என்றும் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

திறக்க உத்தரவிட முடியாது

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு, சட்டம் ஒழுங்கு பிரச்னை இருப்பதால் விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என உத்தரவிட்டு, மனுதாரர் வேண்டுமானால் அறநிலையத்துறையை அனுகலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.