Tamil News
Tamil News
Tuesday, 20 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க மனு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை அண்மையில் கைது செய்தது. இதற்கிடையே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கை அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜாகி செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும்போது, ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்வது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என வாதிட்டார்.

உயர்நீதிமன்றம் மீது குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை

அதையடுத்து அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? என்றும் அமலாக்கத்துறை ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கக் கூடாது என்று ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவறாக நடந்துள்ளது என வாதிட்டார்.

சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை விசாரிக்க முடியாது

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிக்கிறது என்றும் மருத்துவமனையில் உள்ளபோது மருத்துவர்கள் கருத்தை கொண்டு தான் விசாரணை நடத்த முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுத்ததாக கருதுகிறோம் என்றும் தற்போதைய நிலையில், உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்வது தான் சரியாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரை காவலில் எடுக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு

இறுதியில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின் உச்சநீதி மன்றம் விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்துள்ளது.