Tamil News
Tamil News
Wednesday, 21 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது பேசிவரும் கருத்துக்கள் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் மொழி பற்றியும், சனாதன தர்மம் பற்றியும், திராவிட மாடல் கொள்கை பற்றியும், கார்ல் மார்க்ஸ் பற்றியும் ஆளுநர் பேசிவருவது சர்ச்சையாகவே மாறியிருக்கிறது. அந்தவகையில், வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்றும் ஒளிரும் சூரியன் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது மீண்டும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.   

வள்ளாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழா

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வள்ளலார் வாழ்ந்த மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் சித்தி விளாகம், சத்யஞான சபை ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் வடலூரில் நடைபெற்ற வள்ளாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.

இந்தியாவில் சிறு மற்றும் பெரும் தெய்வ வழிபாடு இருந்தது

அப்போது பேசிய அவர், "அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சனாதன தர்மத்தைச் சிலர் தவறாக நினைத்துள்ளனர். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார் என்றும், இந்திய பண்பாட்டில் சிறு தெய்வ, பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை.

இந்தியர்களுக்கு ஆற்றல், அறிவு கிடையாது

ஆனால், வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்சினை உருவானது. கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் 1852ல் இந்தியாவை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் சமூக கட்டமைப்பு இருக்கக் கூடாது அதை குலைத்து விட வேண்டும் எனவும், இந்தியர்களுக்கு ஆற்றல், அறிவு கிடையாது. எனவே அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும், கீழாக நாகரீகத்தை அழிக்க வேண்டும் எனவும் எழுதியுள்ளார் என்றும் பேசினார். 

வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன்

மேலும், வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்றும், ஒளிரும் சூரியன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு எனவும், எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பதுதான் சனாதன தர்மம் எனவும், வள்ளலாரின் நூல்கள் பிரமிப்பை ஏற்படுத்தியது" என்றும் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.