Tamil News
Tamil News
Wednesday, 21 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று ஜூன் 22-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பாணு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை தொடங்கியது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்,ஆர். இளங்கோ தங்களுடைய தரப்பு வாதத்தை முன்வைத்தார். 

கைதுக்கான காரணத்தை தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை

ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு, அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கப்பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். கைது குறித்து தகவலும், காரணங்களையும் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை. கைதுக்கான காரணத்தை தெரிவிப்பது குறித்து, அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார். 

வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல

இதையடுத்து, சட்டப்பூர்வ கைதாக இருந்தால் ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஆகையால், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

விசாரணைக்கு உகந்தது தான்

நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என்றும், செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது என்று உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதிட்டது. மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது

செந்தில் பாலாஜியை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை, அறுவை சிகிச்சை போலி என்று எப்படி கூற முடியும் என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆடிட்டர் நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்தார். செந்தில் பாலாஜி ஒரு முறை நேரில் ஆஜரானார். 

அமலாக்கத்துறை முடிவுக்கு வந்ததற்கு நன்றி

ஆகையால், செந்தில் பாலாஜி மீது உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது அமலாக்கத்துறை என்றும், இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்க கோரியது இந்திய வரலாற்றில் முதல் முறை என்றும், அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியை விசாரிப்பது முறையல்ல என அமலாக்கத்துறை முடிவுக்கு வந்ததற்கு நன்றி எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை முன் வைக்க முடியாது

இதற்கு, வழக்கை ரத்து செய்யக்கோரும் மனு மீது வேண்டுமானால் உள்நோக்கம் என்று குறிப்பிடலாம், ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என்றும், ஆட்கொணர்வு மனுவுக்கு அப்பால் வாதங்களை முன் வைக்க முடியாது எனவும் அமலாக்கத்துறை வாதிட்டது. அமலாக்கத்துறையின் ஆட்சேபத்தை கவனத்தில் கொள்வதாக நீதிபதிகள் பதில் அளித்தனர். 

அமலாக்கத்துறை பயன்படுத்திவிட்டது

தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில், காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கப்பிரிவு கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இயந்திரத்தனமாக நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு 24 மணி நேர அவகாசம் மட்டுமே உள்ளது. அதை அமலாக்கத்துறை பயன்படுத்தியுள்ளது என்று வாதிடப்பட்டது. 

வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

காரசாரமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கையை ஏற்று, செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.