Tamil News
Tamil News
Wednesday, 28 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பொது சிவில் சட்டம் பற்றி பிரதமர் மோடி பேசியிருந்தநிலையில், அவருக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்ததையடுத்து, அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் வானதி சீனிவாசன். 

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் - மோடி

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டத்தை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது, "பொது சிவில் சட்டத்தை வைத்து எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியலை செய்து வருகிறார்கள். ஆகையால், பொது சிவில் சட்டத்திற்கு அனைவரும் தங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் எனவும், எந்த மதத்தை சேர்ந்த மக்களும் சமூகத்தை சேர்ந்த மக்களும் சட்டத்தை எதிர்க்க கூடாது, ஊழல் செய்த எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதால், அவர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். எதிர்க்கட்சிகள் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்க்கக் கூடாது" என்று பேசியிருந்தார். 

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் - ஸ்டாலின் எதிர்வினை

இந்தநிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில், இன்று ஜூன் 29-ம் தேதி சென்னையில் திமுக நிர்வாகி வேணு இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது; "மணிப்பூர் பற்றி எரியும் போது கூட மோடி அங்கு செல்லவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

தொடர்ந்து, மதத்தை வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்கிறார். பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என மோடி சொல்லியிருக்கிறார். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி லாபம் காண முயற்சிகள் நடைபெறுகின்றன. நாடாளுமன்ற தேர்தாலில் பாஜகவிற்கு பாடம் கற்பிக்க மக்கள் தயாராகிவிட்டனர். நாட்டில் 2 சட்டங்கள் இருக்க கூடாது என்கிறார் மோடி, மத பிரச்னைகளை அதிகமாக்கி லாபம் பார்க்க முயற்சி செய்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஆட்சியை மத்தியில் உருவாக்க வேண்டும்" என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

முதலமைச்சருக்கு வானதி பதிலடி

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி பேச்சிற்கு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; 

"மிகக் கடுமையான விமர்சனத்தை திருமண விழாவில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருமண விழாவில் அமர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, எதிர்க்கட்சிகளுக்கு சாபம் கொடுப்பது இதெல்லாம் தான் திராவிட மாடலா?. நல்ல இடங்களில் இந்த மாதிரியான அரசியல் பேசுவது அநாகரிகமாக பார்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பேசியது நூறு சதவீதம் உண்மையான ஒன்று. அவர் எதும் பொய் பேசவில்லையே. 

முதல் நாற்காலியை உங்கள் குடும்பத்திற்கு சொந்தமானதாக வைத்துக்கொண்டு, பாரதிய ஜனதா கட்சி மாதிரி ஒரு ஜனநாயக கட்சியை குறை கூறுவதற்கு உங்களுக்கு எந்த அறுகதையும் கிடையாது. 

பொது சிவில் சட்டம் பிரதமர் மோடியும், பாஜகவும் கொண்டு வந்தது அல்ல. பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், மதக்கலவரம் வரும் என்ற பிரச்னையை கிளப்பாமல், இந்த நாட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கு சம உரிமை கிடைப்பதற்கான வாய்ப்பை உங்களின் சுயநல அரசியலுக்காக புறம் தள்ள வேண்டாம்" என பேசியுள்ளார்.