Tamil News
Tamil News
Wednesday, 28 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை நீக்கி நேற்று இரவு ஆளுநர் உத்தரவிட்டிருந்தநிலையில், நள்ளிரவில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.   

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பணபரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. பின்னர், விசாரணைக்கு அழைத்துச் செல்லும் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர். 

இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் 

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்துவந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வீடியோ காஃன்பரன்ஸ் மூலம் ஆஜரானார். இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் அவர் வகித்து இலாகாவை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் மாற்றப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த விவகாரம் தான் தற்போது வரைக்கும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. 

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதனடிப்படையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி நேற்றிரவு 7.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என ஆளுநருக்கு எதிராக கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். 

அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

ஆளுநரின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என நேற்று பத்திரிக்கையாளர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு உரிமையில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார். அரசமைப்பின்படி ஒரு அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை தெரிவித்திருந்தார். அதேபோல், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது பொதுவான கருத்து என பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். 

நிறுத்தி வைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடித்தால் அவர் மீதான விசாரணை பாதிக்கப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு கூறியிருந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், உத்தரவை நிறுத்தி வைத்திருப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் தெரிவித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  

ஆலோசனை

செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நள்ளிரவு 12 மணியளவில் நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையில் ஆளுநரும் முதலமைச்சரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்க உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. அதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.