Tamil News
Tamil News
Friday, 30 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே ஆளும் திமுக அரசிற்கு குடைச்சலை ஏற்படுத்தி வருகிறார். இது தமிழகத்தில் மட்டுமா என்று பார்த்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலெல்லாம் ஆளுநர்கள் குடைச்சல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. அந்தவகையில்தான், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தற்போது தமிழகமெங்கும் எதிரொலித்து அது இப்போது அவருக்கெதிராக கையெழுத்து இயக்கமாக மாறியிருக்கிறது. ஆளுநருக்கெதிரான கையெழுத்து இயக்கம் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி இரண்டு ஆண்டுகள் கூட முடியாதநிலையில், தற்போது பதவி விலக கோரி கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் வெடித்துக்கொண்டிருப்பதை பார்த்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்தார் என்பதை சற்று விலாவரியாக பார்க்க வேண்டியிருக்கிறது. 

தமிழகத்தில் ஆளும் திமுகவிற்கும் ஆளுநருக்கும் அடிக்கடி அரங்கேறுவது கருத்து மோதலும் அதிகார மோதலும் தான். தமிழகத்தில் நெடுங்காலமாக பேசப்பட்டு வந்த பிரச்னை எழுவர் விடுதலை பிரச்னை. பல ஆட்சியில், பல நீதிமன்றங்களில், பல ஆளுநர்களிடத்தில், குடியரசுத் தலைவர்களிடத்தில் முறையிடப்பட்ட வழக்கு எழுவர் விடுதலை வழக்கு. திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எழுவர் விடுதலையை சாத்தியப்படுத்துவோம் என்று அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்தபிறகு, எழுவர் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினர். அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பாமல் மெளனம் காத்து வந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பின்னர், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். அதைத்தொடர்ந்து, நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தமிழக அரசின் தீர்மானங்களை திரும்பி பார்க்காமல் மெளனம் காத்தார் வந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உயிர்களை பரித்துக்கொண்டிருந்த ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசோடு ஆட்டம் ஆடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். அதனடிப்படையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதையும் ஆளுநர் அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி என்றிருந்த பெயர் கூட ரம்மி ரவி என்று பெயர் மாற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவெளியில் பேசி வந்தனர். 

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதும், அதை ஆளுநர் திருப்பி அனுப்புவதும் தொடர் கதையாக தொடர்ந்தது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என கூறி வந்த ஆளுநர், ஒரு கட்டத்தில் "ஆன்லைன் சூதாட்டங்களைத் தங்களின் வரம்புக்குள் கொண்டுவருவதற்கும், அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு' என மத்திய அமைச்சர் அறிவித்ததையடுத்து, மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறதா, மத்திய அரசுக்கு அதிகாரமிருக்கிறதா என்றதையெல்லாம் மறந்து பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டது. 

இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துகள் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் மேலும் எரிச்சலூட்டியது. ஆளுநர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாரதம் பற்றியும், சனாதனம் பற்றியும் பேசி வந்தது எதிர்ப்பைக் கிளப்பியது. அந்தவகையில்தான் திராவிட மாடல் ஒரு காலாவதியான மாடல் என்றும் இதனால் எந்த பயனும் இல்லை என்றும் பேசியது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பல்கலைக்கழக விவகாரம், மாநிலக் கல்வி விவகாரம், என அடுத்தடுத்து தமிழகத்தின் மீதும் திமுக ஆட்சியின் மீதும் தொடர்ந்து கருத்துக்களை பேசிவந்தார். அவர் பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் கருத்துக்களை பெற்று வந்தார் ஆளுநர்.

அடுத்தபடியாக, வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்றும் ஒளிரும் சூரியன் என்றும் பேசியது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக இளைஞர்களிடத்தில் திறன் இல்லை என்று பேசியது கடும் விமர்சனத்தை பெற்றது. இதையடுத்துதான், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து, செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றி அமைத்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இந்த விவகாரம் தான் தற்போது ஆளுநருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் வரை வந்திருக்கிறது. 

தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை ஆளுநர் ஒப்புதல் தர மறுத்தநிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் அடுத்த பாய்ச்சலாக செந்தில் பாலாஜியை பதிவியை நீக்கி இரண்டு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தநிலையில், உத்தரவிட்ட 5 மணி நேரத்தில் தான் உத்தரவிட்டதை நிறுத்தி வைத்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் திமுக அமைச்சர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைப் பெற்றார்.

இப்படி, தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஆளுநரை பதவி நீக்கக்கோரி பல்வேறு தோழமை கட்சிகளும் வற்புறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வைகோ ஆளுநருக்கு எதிராக கைழுத்து இயக்கத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார். ஆளுநருக்கெதிராக ஒரு கோடி கையெழுத்து வாங்கி அதை குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். 

வைகோவை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி இன்று ஜூலை 1-ம் தேதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றனர். இப்படி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களும் கையெழுத்து இயக்கங்களும் வலுத்துக் கொண்டு வரும் நிலையில், களத்தில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.