Tamil News
Tamil News
Sunday, 02 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அந்த கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாட்னா கூட்டம்

அசுர பலம் பொருந்திய பாரதிய ஜனதா கட்சியை 2024-ல் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கிவிடுவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர்கள். அந்த வகையில்தான், கடந்த ஜூன் 23-ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இடதுசாரிகள் சார்பில் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, மகராஷ்டிரா சிவசேனா பிரிவின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகள் இரண்டாவது கூட்டம்

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் பாஜக மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை மாதம் 10 மற்றும் 12-ம் தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்திருந்தார்

பெங்களூருவுக்கு மாற்றம்

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் அடுத்த ஜூலை மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்திருந்தார். ஏற்கனவே 2-வது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. 

எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து

இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டமானது இன்று ஜூலை 3-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காரணம், தமிழ்நாடு - கர்நாடக இடையே உள்ள மேகதாது அணை பிரச்னை காரணமாக பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க திமுக தயக்கம் காட்டியது. அடுத்ததாக, மகராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பாஜகவில் இணைந்தது தொடர்பாக ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாகவும் கூட்டமானது ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஏற்கனவே, ஆலோசனை நடைபெறும் நகரத்தை திமுக மாற்ற கோரிக்கை வைத்திருந்தநிலையில், பெங்களூருவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, சிம்லா அல்லது ஜெய்ப்பூரில் பின்னர் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.