Tamil News
Tamil News
Sunday, 02 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது விவகாரத்தில் கடந்த ஜூலை 01-ம் தேதி கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

நதிநீர் பிரச்னை ஏதும் இல்லை

அவர் எழுதியிருந்த கடிதத்தில், "புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பமே அமையவில்லை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் புகாரில் தீர்வு காணவேண்டிய நதிநீர் பிரச்னை ஏதும் இல்லை என்றும், தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் குடிநீருக்கானவை என்றும் அவற்றிற்கே உட்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

முதலமைச்சர் ஆலோசனை

இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் தலைமைச் செயலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசு முறியடிக்கும்

"மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும் என்றும், கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும். மேகதாது அணை பிரச்னை குறித்து தக்க நடவடிக்கைகளை அரசு எடுக்கும். மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.