Tamil News
Tamil News
Sunday, 09 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஆளுநர் VS தமிழக அரசு

தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு என்பது ஆளுநர் பதவி ஏற்ற நாளில் இருந்தே ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு - தமிழகம் பெயர் விவகாரம், திராவிடம் குறித்த கருத்து, சனாதனம், பாரதம் பற்றியான பேச்சு, மசோதா நிறுத்திவைப்பதாக எழும் குற்றச்சாட்டு, சட்டபேரவையில் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் விட்டது, வள்ளலார் பற்றியான பேச்சு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக எழும் குற்றச்சாட்டு, இறுதியாக செந்தில் பாலாஜி விவகாரம் என பல்வேறு இடங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது. 

குடியரசுத் தலைவருக்கு கடிதம்

இப்படியான சூழலில், திடீர் திருப்பமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு 19 பக்க கடிதம் ஒன்றை கடந்த சனிக்கிழமை ஜூலை 08 அன்று எழுதியிருந்தார். அதில், "தமிழ்நாடு அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக ஆளுநர் செயல்படுகிறார் என்றும், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் கடுமையான அரசியலமைப்பு மீறல்" என்றும் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

இந்தநிலையில், ஆளுநருக்கெதிராக முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் பற்றி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.   

எம்.பி. திருச்சி சிவா

இதுபற்றி எம்.பி. திருச்சி சிவா தெரிவித்ததாவது, "குடியரசுத் தலைவர் பெரிய பொறுப்பில் இருக்கக்கூடியவர். விரும்புகிற வரையில்தான் ஒருவர் ஆளுநராக நீடிக்க முடியும். நியமிப்பதும் அவர்தான், திரும்பப்பெறுவது அவர்தான் என்கிற அடிப்படையில், ஆளுநரை திரும்பபெற வேண்டியது அவசியம் என்ற எங்களின் கவலையை நீங்களே நியாயத்தின்படி முடிவெடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார். அவர் நல்ல முடிவெடுத்து இந்திய நாட்டின் ஜனநாயக மாண்பையும், அரசியல் சட்டத்தின் கோட்பாட்டையும் காப்பாற்றுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்" என்று தெரிவித்திருக்கிறார். 

செம்மலை

"ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலாக்கக்கூடாது. அது தவிர்க்கப்பட வேண்டும். ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு எழுதியிருக்கிற கடிதம் அதைத்தான் எதிரொலிக்கிறது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்திருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி

"குடியரசுத் தலைவர் உடனடியாக முடிவெடுத்து இந்த ஆளுநரை திரும்ப பெற வேண்டும். அதுதான் தமிழக காங்கிரஸின் கருத்து. தமிழக முதல்வர் அதைத்தான் மையக்கருவாக சொல்லியிருக்கிறார். அவர்கள் ஆளுநரை திரும்பபெறவில்லை என்று சொன்னால், ஆளுநர் எதிலும் பங்கெடுக்க முடியாத ஒரு அரசாக போய்விடும். அது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. அவர் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுவார் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.  

தொல். திருமாவளவன்

"ஏராளமான சட்ட மசோதாக்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள். எனவே, முதலமைச்சர் கடிதத்திற்கு குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம், எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்

வேல்முருகன்

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு தொடர்ச்சியாக அவர் இஷ்டத்திற்கு தமிழ் இலட்சினையை தூக்குவது, நிதிநிலை அறிக்கையில் இல்லாததை கவர்னர் உரையில் வாசிப்பது, ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது, தன்னிச்சையாக துணை வேந்தர்களை நியமிப்பது இதெல்லாம் சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது. இந்த நடவடிக்கைகளுக்காகவே ஆளுநர் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ளலாம்" என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

ஈஸ்வரன்

"அரசியலுக்குள் நாங்கள் நுழைய விரும்பவில்லை. ஆனாலும், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எங்களுடைய முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. அந்த கோணத்தில் பார்க்கும்போது, இதற்கு ஒரு சுமூக தீர்வு வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விட வேண்டும். இந்த விஷயத்தில் இதுதான் எங்களின் கோரிக்கை. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது" என கொங்கு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.