Tamil News
Tamil News
Sunday, 09 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஆளுநர் Vs தமிழக அரசு 

தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு என்பது ஆளுநர் பதவி ஏற்ற நாளில் இருந்தே ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு - தமிழகம் பெயர் விவகாரம், திராவிடம் குறித்த கருத்து, சனாதனம், பாரதம் பற்றியான பேச்சு, மசோதா நிறுத்திவைப்பதாக எழும் குற்றச்சாட்டு, சட்டபேரவையில் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் விட்டது, வள்ளலார் பற்றியான பேச்சு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக எழும் குற்றச்சாட்டு, இறுதியாக செந்தில் பாலாஜி விவகாரம் என பல்வேறு இடங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது. 

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம்

இப்படியான சூழலில், திடீர் திருப்பமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு 19 பக்க கடிதம் ஒன்றை கடந்த சனிக்கிழமை ஜூலை 08 அன்று எழுதியிருந்தார். அதில், "தமிழ்நாடு அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக ஆளுநர் செயல்படுகிறார் என்றும், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் கடுமையான அரசியலமைப்பு மீறல்" என்றும் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

பாஜக தலைவர்கள் விமர்சனம்

இந்தநிலையில், ஆளுநருக்கெதிராக முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் பற்றி தமிழக தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

அண்ணாமலை

"முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாத பிரச்னைகளுக்கெல்லாம் ஆளுநர்தான் காரணம் என்ற வகையில் முதலமைச்சரின் கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர். கடிதத்தில் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், எதற்காக எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருந்தபோது அதிமுக அமைச்சரை நீக்க வேண்டும் என எப்படி வலியுறுத்தினார்? அதற்கான பதில் என்ன? 

செந்தில் பாலாஜி ஓர் உத்தமராகவும், புத்தராகவும், மாநிலத்தைக் காக்க வந்த சேவகர் போலவும் கடிதம் எழுதியுள்ளார். எதற்காக இவ்வளவு பொய்கள். தன்னுடைய கட்சியினரின் தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்டுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. கடிதத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநரிடம் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு எதிராகத்தான் இந்தக் கடிதம் இருக்கிறது. இந்தக் கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. தோல்வி பயம் முதலமைச்சரிடம் தெரிகிறது" என்று பேசினார். 

வானதி சீனிவாசன்

இதையடுத்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "முதல்வர் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு மிகப்பெரிய கடிதத்தை எழுதியிருக்கிறார். ஆளுநர் காலையில் ஒரு கருத்தை பேசுகிறார், மாலையில் ஒரு கருத்தை பேசுகிறார், இதனால் மாநிலத்தில் உங்களுடைய கொள்கைக்கு என்ன பிரச்னை வந்தது. குடியரசுத் தலைவருக்கு நீங்கள் எழுதியிருக்கக்கூடிய கடிதம் முழுக்க முழுக்க கற்பனை. நீங்கள் ஒரு கற்பனைக்கோட்டையை கட்டிக்கொண்டு, வேறு யாரும் மாற்றுக்கருத்து சொல்லக்கூடாது என்கின்ற எதேச்சதிகரமான எண்ணத்திற்கு நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் எழுதிய கடிதம் முழுக்க உண்மையில்லாத கடிதம். அவரைப்பற்றி ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்து ஒரு சிக்கலான நெருக்கடியை நீங்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு மாநிலத்தின் ஆளுநர் எந்த கோப்புகளுக்கு அனுமதி கொடுப்பது, எதனால் தாமதமாகிறது என்பதை அவருடைய அலுவலக குறிப்பின் வாயிலாக கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு பற்றி கூட செய்திக்குறிப்பு வந்திருக்கிறது. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஆளுநர் மாளிகை பதில் தருவதால் அதனால் முதலமைச்சருக்கு எரிச்சல் வருகிறதா என்பது எங்களுக்கு தெரியவில்லை" என்று பேசினார். 

நாராயணன் திருப்பதி

இதையடுத்து முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், "வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டீர்களே ஸ்டாலின் அவர்களே! திராவிட அரசியல் என்றால் என்ன? என்று முதலில் தெளிவாக, விரிவாக குடியரசுத்தலைவருக்கு  விளக்கி விட்டு பின்னர் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கலாம்.

குடியரசு தலைவர், ஆளுநர் ரவியிடமே, 'திராவிட மாடல் அரசியல் என்றால் என்ன'? என்று கேட்க போகிறார். லஞ்சம், ஊழல்,முறைகேடுகளின் மொத்த உருவம் தான் திராவிட மாடல் அரசு என்ற தெளிவான விளக்கத்தை, ஆதாரங்களோடு அளிக்க போகிறார் ஆளுநர். இது தேவையா? வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டீர்களே ஸ்டாலின் அவர்களே? 19 பக்க வெண்கல பாத்திரம். தேவர் மகன் திரைப்படத்தில் ரேவதி சொன்னது போல் 'வெறும் காத்து தாங்க வருது'" என்று விமர்சனம் செய்திருக்கிறார்.