Tamil News
Tamil News
Sunday, 09 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மனுதாக்கல் செய்தநிலையில், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். 

ஆதரவும் எதிர்ப்பும் 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த முடிவுக்கு மக்கள் தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, மக்களிடத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. மக்கள் பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றும் ஒரு சில நாம் தமிழர் கட்சி மற்றும் இன்னும் ஒரு சில இயக்கங்கள் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

மத்திய அரசு அனுமதி 

இதையடுத்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பத்திருந்தது. இதை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அடுத்தகட்டமாக, மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கவேண்டியிருந்தநிலையில், அந்த ஆணையமும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்தது. 

15 நிபந்தனைகள்

ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் கண்காணிப்புக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவசரகால மீட்புப் பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கூடாது உள்ளிட்ட 15 நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியிருக்கிறது.

பேனா சிலை அமைக்க எதிர்ப்பு

இந்தநிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைய இருக்கிறது. இதனால், கடல் வளம் பெரிய அளவில் பாதிக்கும் என்றும், இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் கடற்கரைக்குள் எந்தவொரு கட்டுமானத்தையும் அனுமதிக்கக்கூடாது என மனுவில் குறிப்பிட்டிருந்தார். பொது நலனை கருத்தில் கொண்டுதான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

மனு தள்ளுபடி 

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவகையில் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியான எந்த விவரங்களும் அடங்கியிருக்கவில்லை. பொதுநலனை கருத்தில்கொண்டு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த மனுவை விசாரிக்க முடியாது என்றுகூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.