Tamil News
Tamil News
Monday, 10 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்றும், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். 

சட்டம் ஒழுங்கு பற்றி இபிஎஸ் கண்டனம் 

"ஒரு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை. மாநிலம் முழுவதும் குற்ற பூமியாக காட்சியளிப்பதும், அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுவது என்பது தமிழகத்தில் நடக்கும் விந்தையாகும். திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாமல், காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர், இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

சட்டம் ஒழுங்கு பற்றி ஓபிஎஸ் கண்டனம் 

அதேபொல், "கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்கள் அதிகரிப்பு என சட்ட விரோதமான செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளிடம் ஆட்சியாளர்கள் மென்மையாக நடந்து கொள்வதுதான்" என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டம் ஒழுங்கு பற்றி திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

சட்டம் ஒழுங்கு பற்றி முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்

இந்தநிலையில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஜூலை 11 நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்; "தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆய்வுக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று சொல்வதால், ஏதோ நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் கருதத் தேவையில்லை என்று பேசினார். 

பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

தொடர்ந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை,  சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்.  சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும்.  நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க வேண்டும்.  பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விரும்பத்தகாத செயல்களால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் போது, கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும். அவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. காவல் மரணங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்றும், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போதை மருந்து நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.