Tamil News
Tamil News
Friday, 14 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சட்ட ஆணையத்திடம் பாமக சார்பில் கருத்துக்களை சமர்ப்பித்திருக்கிறார். 

பாஜகவில் அங்கம் வகிக்கும் அதிமுக எதிர்ப்பு

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக அரசு முயன்று வருகிறது. நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம் என்ற கருத்தை பிரதமர் மோடி அவ்வப்போது முன்வைத்து வருகிறார். பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, நாம் தமிழர் அதுமட்டுமல்லாமல் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. 

பாமகவும் எதிர்ப்பு

இந்த வரிசையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், "ஒவ்வொரு மதப் பிரிவினரின் பாரம்பரியத்துக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும் என்றும், பல்வேறு மதப் பிரிவினரின் சிவில் உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  

ஒன்றிய அரசு கைவிட வேண்டும்

மேலும், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கவே பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது எனவும்,  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினர் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்" என்று 22-வது சட்ட ஆணையத்திடம் பாமக சார்பில் கருத்துக்களை சமர்பித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

வரும் 18-ம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு பாமாகவுக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில், பொது சிவில் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில் பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவை தொடர்ந்து தற்போது பாமக-வும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.