Tamil News
Tamil News
Sunday, 16 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

செம்மண் எடுத்ததாக வழக்கு

கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அண்மையில் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அமலாக்கத்துறை வளையத்திற்குள் வந்த 2-வது அமைச்சர் 

இந்தநிலையில்தான், அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் சோதனையை மேற்கொண்டு வருகிறது.  சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியிலுள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியை அடுத்து அமலாக்கத்துறை சோதனை வளையத்திற்குள் 2வது அமைச்சராக பொன்முடி வந்திருக்கிறார்.   

அமலாக்கத்துறை சோதனையானது, அமைச்சர் பொன்முடியின் சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வீட்டில் 5க்கும் அதிகமான அமலாக்கத்துறை அதிகாரிகள்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை காலை 7.30 மணி முதல் சோதனையானது நடைபெற்று வருகிறது. 

அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கெளதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. கெளதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.