Tamil News
Tamil News
Sunday, 16 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வரும்நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டமானது இன்றும் நாளையும் நடக்க இருக்கிறது. இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் 24 கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளநிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; 

அமலாக்கத்துறை சோதனையை கண்டு கவலைப்படவில்லை

"ஒன்றிய பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஒருசில முடிவுகளை எடுத்தோம். அதைத்தொடர்ந்து, இன்றும் நாளையும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் 24 கட்சியை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டம் ஆளும் பாஜகவிற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடு தான் அமலாக்கத்துறை ஏவிவிடப்பட்டு, வடமாநிலங்களில் செய்ததை தற்போது தமிழ்நாட்டிலும் அந்தப் பணியை தொடங்கி இருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை. 

பொன்முடி சட்டரீதியாக சந்திப்பார்

இன்றைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையானது அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது புனையப்பட்ட பொய் வழக்கு தான் இந்த வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு. 10 ஆண்டு காலம் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் அவர்கள் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அண்மையில் அமைச்சர் பொன்முடி மீது சுமத்தப்பட்ட 2 வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே, இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பார். 

இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது

தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் ஆளுநர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்தி வருகிறார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். எதிர்க்கட்சிகள் கூட்டமானது ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜகவை அப்புறப்படுத்துவதற்காக கூட்டப்படுகிற கூட்டம் காவிரி பிரச்னைக்காக கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது, அதிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் இந்தக் கூட்டம்" என்று பேசினார்.