Tamil News
Tamil News
Sunday, 16 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வரும்நிலையில், அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். 

கார்கே கண்டனம்

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்திருக்கிறார். பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் சோதனை நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். இதுபோன்ற சோதனைகளால் எதிர்க்கட்சிகளை தடுமாற வைக்க முடியாது என தெரிவித்திருக்கிறார். 

அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை நடத்திவரும் சோதனையை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜகவினர் கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை உங்களால் பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது என தெரிவித்திருக்கிறார். 

கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

இதையடுத்து, அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை சோதனைக்கு தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமலாக்கத்துறை பாஜகவின் அமைப்பு போல செயல்படுகிற வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடந்துவரும் சோதனை. எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துவது கண்டனத்திற்குரியது. அமலாக்கத்துறை நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், சகல அதிகாரம் படைத்ததுபோல செயல்படுவது வருத்தமான விஷயம். திமுக அரசு மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகவே திமுக அமைச்சர்கள் மீது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று நடைபெற இருக்கிற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்புவதற்காகவே அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொள்வதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.