Tamil News
Tamil News
Monday, 17 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி இன்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்திருக்கிறது.  

செம்மண் எடுத்ததாக வழக்கு

கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

இந்த வழக்கானது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அண்மையில் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

இந்தநிலையில்தான், நேற்று காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் சோதனையை மேற்கொண்டது.  சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியிலுள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடைபெற்றது. 

அமலாக்கத்துறை சோதனையானது, அமைச்சர் பொன்முடியின் சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கெளதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்றது. கெளதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. 

இலட்சக்கணக்கான பணம் பறிமுதல்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வரும்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. மேலும், ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

வைப்புத்தொகை முடக்கம்

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் அழைத்துச் சென்றனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடியிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நீடித்தது. இரவு நடந்த சோதனையில், அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகையை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும், இந்தோனேஷிய நிறுவனத்திற்கு சுமார் ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. 

சம்மன்

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை சுமார் 19 மணி நேரம் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டநிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி இன்று மாலை 4 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. அமைச்சர் பொன்முடியை இன்றும் விசாரணைக்காக அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்திருக்கிறநிலையில், அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படுவாரா மாட்டாரா என்ற விவாதம் தற்போது எழுந்திருக்கிறது.