Tamil News
Tamil News
Monday, 17 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக்கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  

டெண்டர் முறைகேடு 

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்திருந்தார். 

ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி நான்கு வழிச்சாலை, திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் நான்கு வழிச்சாலை மற்றும் சென்னை வண்டலூர் உள்ளிட்ட ஆறு வழிச்சாலை உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். இந்த நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். 

சிபிஐ விசாரிக்க தடை

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என கடந்த 2018-ம் ஆண்டுஅனுமதி வழங்கியது. இதனைத் எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. 

வழக்கை முடித்து வைக்க வேண்டும்

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது. அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. எனவே அவர்கள் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை முடித்து வைத்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

அதிரடி தீர்ப்பு

இந்தநிலையில், இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக்கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார். ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது என்றும், ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும் தீர்ப்பளித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.