Tamil News
Tamil News
Monday, 17 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

ஊழலை ஊக்குவிக்க எதிர்க்கட்சியினர் பெங்களூருவில் கூடுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகள் கூட்டம் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். 

பாட்னா கூட்டம்

மத்தியில் ஆளும் பாஜக அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, கடந்த மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் எதிர்க்கட்சி கூட்டம் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. பாட்னா கூட்டத்தில் 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, அடுத்த கூட்டம் சிம்லா அல்லது பெங்களூருவில் நடைபெறும் என அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

பெங்களூர் கூட்டம்

அதனடிப்படையில், எதிர்க்கட்சிகள் இரண்டாவது கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அதில், காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆம் ஆத்மியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மாநிலங்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 24 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். 

ஊழலை ஊக்குவிக்க எதிர்க்கட்சியினர் கூடுகிறார்கள்

இந்தநிலையில், அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, "ஊழலை ஊக்குவிக்க எதிர்க்கட்சியினர் பெங்களூருவில் கூடுகிறார்கள் என்றும், 9 ஆண்டுகளில் பழைய அரசாங்கங்களின் தவறுகளை திருத்தியிருக்கிறோம் என்றும் பேசினார். 

ஊழல் வழக்கை சந்திக்கும் திமுகவுக்கு நற்சான்றிதழா.? 

ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் உள்ள ஊழல்வாதி மீது விசாரணை நடைபெற்றால், இன்னொரு மாநிலத்தில் உள்ள ஊழல்வாதி அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். இவர்களுடைய நோக்கம் ஊழல் செய்து சொத்துக்களை குவிப்பது, ஊழலிலிருந்து தப்பிக்க அரசியல் கூட்டணிகள் அமைப்பது என குற்றம் சாட்டியிருக்கிறார். 

தொடர்ந்து, இவர்களுக்கு வாக்களித்தால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்றும், இவர்கள் இவர்களுடைய சந்ததிகளை வளர்ப்பதிலே கவனம் செலுத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். சில கட்சிகளின் சுயநல அரசியலால் முக்கிய நகரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,  ஊழல் வழக்கை சந்திக்கும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்றிதழ் வழங்குவதாக மோடி விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.