Tamil News
Tamil News
Monday, 17 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

இந்தியாவை கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி தற்போது 10-வது ஆண்டில் அடியெடுத்து, அடுத்த 5 ஆண்டு கால ஆட்சியை ஆள்வதற்கு அடிகோலிட்டு வருகிறது ஆளும் பாஜக அரசு. இன்னொரு பக்கம் ஆளும் எதேச்சதிகார பாஜக அரசை வீட்டுற்கு அனுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் கங்கனம் கட்டி, பாஜக அரசின் கடிவாளத்தை கட்டுப்படுத்த ஓரணியில் திரண்டு கர்ஜிக்க தொடங்கியிருக்கிறது எதிர்க்கட்சிகள். வடக்கிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணியும், தெற்கிலிருந்து இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணியும் ஒரே நாளில் கர்ஜிக்க தொடங்கியிருப்பது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்று விலாவாரியாக பார்க்க வேண்டியிருக்கிறது. 

மத்தியில் ஆளும் பாஜக அரசு 9 ஆண்டு காலத்தை கடந்து 10-வது ஆண்டில் அடியெடுத்து 9 ஆண்டு கால சாதனையை மக்கள் மத்தியில் முழக்கமிட்டு வருகிறது. பாஜகவின் முழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வலுவுடன் கூடிய கைகளோடு கைகோர்த்து வருகிறது எதிர்க்கட்சிகள். அதற்கு அடித்தளமிட்ட நாள் தான் ஜூன் 23. அதற்கு அடிகோலியவர் தான் நிதிஷ்குமார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த முதல் எதிர்க்கட்சிகள் கூட்டமானது 16 எதிர்க்கட்சித் தலைவர்களின் கைகளை உயர்த்தியபோது, ஆளும் பாஜக அரசின் முகம் சுறுங்கத் தொடங்கியது என்று பத்திரிக்கையாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.  

அவர்களின் கருத்து உண்மையானதோ என்னவோ தெரியவில்லை, பாஜக ஆளாத கட்சிகள் மீது ED என்கிற வேட்டை நாயை ஏவிவிட்டு எதிர்க்கட்சிகளை உருக்குலைக்கும் வேலைகளை செய்து வந்தது என்றெல்லாம் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்து வந்தனர். பாட்னா கூட்டத்தில் காங்கிரஸிற்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கருத்து வேறுபாடு, தமிழக முதல்வருக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் பேசப்பட்டது. பாட்னா கூட்டம் வெறும் போட்டோசூட் என்றெல்லாம் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகள் கூட்டத்தை விமர்சனம் செய்து வந்தது. 

ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம் மட்டுமல்லாது பாஜக ஆளாத கட்சிகளின் அரசை கலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தது. அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு மகராஷ்டிர அரசியல் களமே சாட்சி. அப்படி, பாஜக இப்படிப்பட்ட செயல்பாடுகளால் பாட்னா கூட்டத்தை பார்த்து முகம் வேர்க்கத் தொடங்கியது என்றே தான் பார்க்க முடிகிறது என்றெல்லாம் பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். இப்படி, மத்திய அரசின் கிடுக்குப்பிடியில் சிக்குண்ட போதும், சளைக்காமல் இரண்டாவது கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர் எதிர்க்கட்சிகள். 

அதன் தாக்கமாகத்தான், எதிர்க்கட்சிகள் இரண்டாவது கூட்டமானது பெங்களூருவில் நேற்றும் இன்றும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையில் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தரப்பிலிருந்து முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமூல் கட்சியிலிருந்து மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸிலிருந்து சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி அவசர சட்டத்தில் ஒன்றுபட்டு இணைந்த ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலு பிரசாத் யாதவ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, விசிகவின் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட 24 கட்சித் தலைவர்கள் பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர்.  

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி ( INDIA) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், கூட்டணி பங்கீடு பற்றியான பேச்சுவார்த்தை மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் தெற்கில் இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி  ( INDIA) கூட்டம் நடந்து முடிந்த நிலையில், இன்னொரு பக்கம் வடக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தலைமையிலான கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அதிமுக, பாமக, த.மா.க, ஐ.ஜே.கே. புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளது. மேலும், சிவசேனாவிலிருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, சரத் பவாரிலிருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், நிதிஷ்குமாரிடமிருந்து பிரிந்து சென்ற ஜித்தன்ராம் மஞ்சி உள்ளிட்ட 38 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். 

இப்படி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வடக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டமும், தெற்கில் இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணியின் கூட்டமும் நடைபெற்று வரும்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில், மக்களின் பார்வையில் யார் அதிக அறுவடை செய்யப்போகிரார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..