Tamil News
Tamil News
Wednesday, 19 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

கலவர பூமியான மணிப்பூர் 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குக்கி இனமக்களுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காலப்போக்கில் மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. கலவரத்தால் மணிப்பூரில் உள்ள வீடுகள், கடைகள், கோயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

கலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தநிலையில், அரசியல் கட்சிகள் பாஜக அரசு இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வருவதாக குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து, அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் கடந்த ஜூன் 24-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் 'மணிப்பூர் விவகாரத்தில் உண்மையில் தீர்வு காண வேண்டுமென்றால், முதல்வர் பிரேன் சிங்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினர். 

கொடூரமான காணொளி

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த கலவரத்தில், கடந்த மே மாதம் நடைபெற்ற கொடூரமான காணொளி நேற்றைய தினம் வெளியானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. அந்தக் காணொளியில், மொய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பொதுவெளியில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தி, அந்தப் பெண்களை கூட்டு பாலியல் செய்திருக்கின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

பிரதமரின் மவுனமும் செயலற்ற தன்மையுமே மணிப்பூர் அராஜகத்திற்கு காரணம் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வன்முறைகளை கண்டுகொள்ளாமல் பிரதமர் கண்மூடி அமர்ந்திருப்பது ஏன்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். டபுள் என்ஜினால் பயங்கரம் நிகழ்ந்த பிறகும் பிரதமர் அமைதியாகத்தான் இருப்பார் என இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரித்தனர். 

மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்த காணொளி வெளியானநிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பழங்குடி அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மத்திய அரசு உத்தரவு

மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடூரத்தின் காட்சியை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆடைகளின்றி 2 பெண்களை ஊர்வலமாக அழைத்துச்சென்ற காட்சியை பகிரக்கூடாது என்றும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளநிலையில், மணிப்பூர் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. இதனால், முதல் நாள் கூட்டத்தொடரில் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமளி

அதேபோல், மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும்  வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமை பற்றி விவாதிக்க மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். பின்னர், விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாக மாநிலங்களவையில் அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்திருந்தார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூட்டணியினர் அமளியில் ஈடுபட்டநிலையில், இரு அவைகளும் நாளை 11 மணி வரை ஒத்திவைத்தனர். 

சந்திர சூட் எச்சரிக்கை

இதையடுத்து, மணிப்பூர் விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி இருக்கிறது. குற்றவாளிகள் மீது மணிப்பூர் டிஜிபி உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை ஏற்க முடியாது, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றம் தலையிடும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.