Tamil News
Tamil News
Friday, 21 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

 

முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி வழங்கி, வழக்கம்போல மக்களை ஏமாற்றுவதாக திமுக அரசிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரூ.200 மட்டும் உயர்த்துவது எந்தவகையிலும் நியாயம் ஆகாது

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது  திமுக வெளியிட்ட வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000- இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி ரூ.1200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை தினந்தோறும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையே  போதாத போது முதியோர் மற்றும்  கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூ.200 மட்டும் உயர்த்துவது எந்தவகையிலும் நியாயம் ஆகாது. எனவே வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் உதவித்தொகையை  ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

இதையடுத்து, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக நிறைவேற்றாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

யானைப்பசிக்கு சோளப்பொறியா?

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தனது தேர்தல் அறிக்கையில் "தமிழகத்தில் தற்போது அரசு உதவித்தொகை பெற்றுவரும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்ற மகளிர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள், அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் உட்பட 32 லட்சம் பேருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என அறிவித்திருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து 26 மாதங்கள் கடந்த நிலையில், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் 1200 ரூபாயாக உயர்த்தியுள்ளது "யானைப்பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு என பல்வேறு கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகியிருக்கின்ற நிலையில், விலைவாசி உயர்வு அடிப்படையில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் திமுக அரசோ 1200 ரூபாயாக, அதாவது வெறும் 200 ரூபாய் உயர்வை மட்டும் அறிவித்து இருக்கிறது. இது ஏழையெளிய மக்களை ஏமாற்றும் செயல். இது கடும் கண்டத்திற்குரியது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.