Tamil News
Tamil News
Monday, 24 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்படிருந்த தடையை நீக்கி அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தீக்கிரையான மணிப்பூர்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குக்கி இனமக்களுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காலப்போக்கில் மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. கலவரத்தால் மணிப்பூரில் உள்ள வீடுகள், கடைகள், கோயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

எதிர்க்கட்சியினர் கொந்தளிப்பு 

மணிப்பூர் மாநிலம் கடந்த மூன்று மாதங்களாக பற்றி எரிந்தநிலையில், கடந்த 20-ம் தேதி வெளியான ஒரு வீடியோவால் இந்தியா முழுவதும் அந்த விவகாரம் பற்றி எரியத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் பிரதமரின் மவுனமும் செயலற்ற தன்மையுமே மணிப்பூர் அராஜகத்திற்கு காரணம் எனவும் வன்முறைகளை கண்டுகொள்ளாமல் பிரதமர் கண்மூடி அமர்ந்திருப்பது ஏன்? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். 

நாடாளுமன்றம் முடக்கம்

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முதலே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபடப்போவதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்தனர். அதேபோல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாள் முதல் 4-வது நாளான இன்று வரை நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.   

பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்தநிலையில், 4-வது நாளான இன்றும் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியே பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

இதையடுத்து, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மக்களவையில் பாஜகவிற்கு அறுதிபெரும்பான்மை இருக்கிறது. ஆனால், தீர்மானம் கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கட்சிகள் இந்தமாதிரியான முடிவை எடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்பட்டது. 

மணிப்பூரில் இணையதள சேவை தடை நீக்கம்

மணிப்பூரில் கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவைக்கு 3 மாதங்களுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டிருந்தது. மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்படிருந்த தடையை நீக்கி அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் 3 மாதங்களுக்கு பின்னர் பிராட்பேண்ட் இணையதள சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இணையதள சேவை பயன்படுத்துவோருக்கு தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.