Tamil News
Tamil News
Thursday, 27 Jul 2023 00:00 am
Tamil News

Tamil News

2 நாள் சுற்றுபயணம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் தஞ்சையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்சி கேர் கல்லூரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது பேசிய முதலமைச்சர் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ரத்த நாளாங்களாக பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களே, எனது உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன் பிறப்புகளே என தனது உரையை துவக்கினார். தொடர்ந்து திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; 

திருச்சியும் - திமுகவும்

திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 1957-ல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தான் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என திட்டமிட்டோம். திருச்சியை திமுகவின் பாடி வீடு என அண்ணாவும், திருச்சி திமுகவின் தீரர்களின் கோட்டை என மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரும் சொல்வதுண்டு. கழகத்தின் தீரர்களின் கோட்டைதான் திருச்சி. 1971-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தான் கலைஞர் அவர்கள் நம் கொள்கை முழக்கங்களை வெளியிட்டார். அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீர்வோம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என ஐம்பெரும் முழக்கங்களை உருவாக்கித்தந்தார்கள்.

நேருவை புகழ்ந்த முதலமைச்சர் 

மிக முக்கிய மாநாடுகளை தலைவர் கலைஞர் திருச்சியை தேர்ந்தெடுத்துதான் நடத்துவார். திருச்சியில் பல்வேறு மாநாடுகள் ஆட்சிக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கின்றது கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 10 நாட்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்திட வேண்டும் என திட்டமிட்ட நொடியே நான் நடத்துகிறேன் என பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் நேரு என புகழ்ந்து தள்ளினார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாகிய நீங்கள் ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெற்றி ஒன்றே இலக்கு என வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.மேலும், அவர் பேசுகையில்; வாக்குச்சாவடிகளின் பொறுப்புகளும், கடமைகளையும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்தும் பேசினார். மேலும், வாக்குச்சாவடியில் எப்படி களமாட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

பொய்க்கு ஆயுசு குறைவு

திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம், விவசாய நலன் சார்ந்த திட்டம் என மக்கள் ஒவ்வொருவரும் ஏதொவொரு வகையில் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.நம்மீது காழ்ப்புணர்வு கொண்டு பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டுள்ளனர். பொய்க்கு ஆயுசு குறைவு. பொய் சொல்வோர் பொய்களையே பேசட்டும், நாம் நாம் கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லிக்கொண்டே இருங்கள். 

பாஜக ஆட்சி தொடர்ந்தால்..?

இன்றைக்கு சமூக ஊடகங்கள் பரப்புரையில் உலகளாவிய வளர்ச்சியில் இருக்கின்றது. நீங்கள் சமூக ஊடகங்களில் உடனடியாக கணக்கினை துவங்கி நம் கொள்கைகளை அதில் பதிவிடுங்கள். நலத்திட்டங்களை பதிவிடுங்கள், சமூக ஊடகங்களை நல்ல நோக்கத்தோடு, நல்லமுறையில் நீங்கள் பயன்படுத்தவேண்டும். தேவையில்லாத பலவற்றை பேசி நம்மை திசை திருப்பும் முயற்சியில் ஆளுநர் செயல்படுகிறார். தேர்தல் வரை அவர் அப்படி பேசுவதே நமக்கு நல்லது. பாஜக ஆட்சி தொடர்ந்தால், இந்திய அரசமைப்பு சட்டமே இனி இருக்காது. வரும் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே முக்கியம்.

வாரிசுகள் தான்

பாஜக, திமுகவை வாரிசு கட்சி என தொடர் பிரச்சாரம் செய்கிறது. ஆமாம், நாங்கள் ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசுகள் தான். பாஜக யாருடைய வாரிசு? பாஜக கோட்சேவின் வாரிசு என்பதை தைரியமாக சொல்ல இயலுமா? எடப்பாடி பழனிச்சாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார்.

நீங்கள் கோட்சேவின் வாரிசுகள்

தமிழகத்தின் உரிமைகளை கைவிட்ட அதிமுகவும், அதை காவு வாங்கிய பாஜகவும் கரம் கோர்த்து இன்று தேர்தல் களத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தில் அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும்."பாஜகவை வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது" பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றவே இந்தியா INDIA கூட்டணி அமைத்துள்ளது. நாங்கள் வாரிசு அரசியல்தான் நடத்துகிறோம். ஆம், ஆரியர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றும் திராவிடர்களின் வாரிசு நாங்கள். கோட்சேவின் வாரிசு என்று பாஜக ஒப்புக்கொள்ள முடியுமா? நம்மைப்பற்றி சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர். அதற்கு பதிலடி தரும் வகையில் அனைவரும் சமூக ஊடகங்களில் கணக்குகள் தொடங்க வேண்டும். இந்தியா கூட்டணியைப் பார்த்து மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று சொன்ன ஸ்டாலின், 2024ஆம் ஆண்டில் இந்தியா நிச்சயம் வெல்லும். நாற்பதும் நமதே என்று பேசினார்.

இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திமுக எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்துக்கொண்டனர்.