Tamil News
Tamil News
Wednesday, 26 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

தீக்கிரையான மணிப்பூர்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குக்கி இனமக்களுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காலப்போக்கில் மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. கலவரத்தால் மணிப்பூரில் உள்ள வீடுகள், கடைகள், கோயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

கொடூர வீடியோவால் இந்தியாவும் பற்றி எரிந்தது

மணிப்பூர் மாநிலம் கடந்த மூன்று மாதங்களாக பற்றி எரிந்தநிலையில், கடந்த 20-ம் தேதி வெளியான ஒரு வீடியோவால் இந்தியா முழுவதும் அந்த விவகாரம் பற்றி எரியத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் பிரதமரின் மவுனமும் செயலற்ற தன்மையுமே மணிப்பூர் அராஜகத்திற்கு காரணம் எனவும் வன்முறைகளை கண்டுகொள்ளாமல் பிரதமர் கண்மூடி அமர்ந்திருப்பது ஏன்? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். 

நாடாளுமன்றம் இன்றுவரை முடக்கம்

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முதலே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபடப்போவதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்தனர். அதேபோல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாள் முதல்  இன்று வரை நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.   

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இதையடுத்து, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மக்களவையில் பாஜகவிற்கு அறுதிபெரும்பான்மை இருக்கிறது. ஆனால், தீர்மானம் கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கட்சிகள் இந்தமாதிரியான முடிவை எடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்பட்டது. 

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்தநிலையில், 6-வது நாளான இன்றும் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து மணிப்பூர் கொடூரம் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் ஒலித்த INDIA.. MODI.. முழக்கம்

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரதமர் விளக்கமளிக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் குறிப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கறுப்புச்சட்டை அணிந்து வந்தனர். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவையில் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் INDIA.. INDIA என முழக்கமிட்டும், ஆளும்கட்சி எம்.பி.க்கள் MODI.. MODI.. எனவும் முழக்கமிட்டனர். இதையடுத்து, மக்களவை இன்றும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் விரையும் INDIA கூட்டணி

இந்தநிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அம்மாநிலத்துக்கு நேரில் செல்ல இருக்கிறது 'இந்தியா' கூட்டணி. கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தநிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள 'இந்தியா' கூட்டணி வரும் 29,30-ம் தேதிகளில் மணிப்பூர் செல்கிறது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி படையெடுத்து செல்ல இருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.