Tamil News
Tamil News
Wednesday, 26 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

2024 தேர்தல் 

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிட்டு தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனால் வரும் 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் பலத்த போட்டியால் இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நெருக்கடியில் பாஜக

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கலவரத்தில் கொளுந்துவிட்ட மணிப்பூர் விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக மணிப்பூர் பழங்குடியின பெண்கள் இருவர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்புணர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள்  கடுமையாக கேள்வி எழுப்பின. இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே மோதல் போக்கு உருவான நிலையில்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. 

மணிப்பூர் செல்லும் I.N.D.I.A கூட்டணி

இதனையடுத்து எதிர்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் வரும் ஜூலை 29, மற்றும் 30 தேதிகளில் I.N.D.I.A கூட்டணியின் எம்.பிக்கள் மணிப்பூர் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்கட்சிகள் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் பதில் அளிக்ககோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று  இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. கடந்த மாதம் மணிப்பூர் கலவரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.