Tamil News
Tamil News
Thursday, 27 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜக வடக்கில் வளர்கிறது, தெற்கில் தேய்கிறது என்ற எதிர்க்கட்சிகள் முன்வைத்த வாசகத்தை மாற்றி அமைப்பதற்கு குட்டிக்கரணம் அடித்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதன் முதல் படியாக அவர் முன்னெடுத்திருப்பதுதான் 'என் மண், என் மக்கள்' என்கிற நடைபயணம்.

ராமேஸ்வரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

இந்த 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரையை இன்று ஜூலை 28 ராமேஸ்வரத்தில் தொடங்க இருக்கிறார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்ற இருக்கிறார். உள்துறை அமைச்சர் வருகை தர இருப்பதால் ராமேஸ்வரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் 2,300 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஜனவரி 20-க்குள் முடிக்க திட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்குவதற்காகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காவும், ஊழல் எதிர்ப்புக்காகவும் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த நடைபயணத்தில் 234 தொகுதிகளுக்கும் செல்ல இருக்கும் அண்ணாமலை, ஜனவரி 20-க்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். யாத்திரையின் ஒரு பகுதியாக பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதிமுக பங்கேற்பு

அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரையில் பாஜகவின் கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக பங்கேற்காது என்று தகவல் கசிந்தது. இதையடுத்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியும், அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தில் பங்கேற்காது என்று தகவல் வெளியானநிலையில், தற்போது பாமகவும் பங்கேற்கவில்லை.  

தாக்கத்தை ஏற்படுத்துமா?

பாஜக முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றி இருந்தது என்றால் மிகையில்லை. அதேபோல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவர்களின் வரிசையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' நடைபயணம் தமிழகத்தில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை வைத்துதான் பார்க்க முடியும்..