Tamil News
Tamil News
Thursday, 27 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

தன் கட்சிக்காரர்களை கண்டிக்க வக்கில்லாமல் நம்மீது பிராண்டுகிறார் என்றும், கோயபல்ஸ்-ன் மொத்த உருவமாக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் ஸ்டாலின்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக வரலாற்றில், ஜெர்மனியின் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயைத் திறந்தாலே வண்டி வண்டியாகப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடக் கூடியவர். ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்த அந்த கோயபல்ஸ்-ஐ நம்மில் யாரும் பார்த்ததில்லை. 

அந்த கோயபல்ஸ்-ன் மொத்த உருவமாக, சந்தர்ப்பவசத்தால் முதலமைச்சரான மு.க. ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள். திருச்சியில் 26.7.2023 அன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், கொத்தடிமைகளின் தலைவராக விளங்கும் மு.க. ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

திமுக-வினர் கொம்பாதி கொம்பர்கள்

"இந்த (திமுக) ஆட்சியின் தவறுகளை எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது" என்று மார்தட்டுகிறார். "திமுக-வினர் தவறுகள் செய்வதில் கொம்பாதி கொம்பர்கள்.... விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் சூராதி சூரர்கள்... இவர்களின் தவறுகளை சாதாரண மக்களும், கொம்பனும், சூரனும் எப்படி கண்டுபிடிக்க முடியும்" என்று கூறி தமிழக மக்கள் சிரிக்கிறார்கள்."எங்களுக்குள் தவறுகள் இருக்கலாம், ஆட்சியில் தவறுகள் இல்லை" என்றும் அதிமேதாவிபோல் திரு. ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.

நம்மீது பிராண்டி இருக்கிறார்

தவறுகளின் மொத்த உருவமே ஆட்சி செய்யும்போது, அவரது கட்சியினர் சும்மாவா இருப்பார்கள்? தன் கட்சிக்காரர்களை அடக்க; கண்டிக்க வக்கில்லாத ஸ்டாலின், அதே கூட்டத்தில் நம்மீது பாய்ந்து பிராண்டி இருக்கிறார்."மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஏதாவது வாயை திறக்கிறாரா? வழக்குகளை காட்டி மிரட்டி பிரதமர் எடப்பாடியை பணிய வைத்துள்ளார்" என்று போகிற போக்கில் சேற்றை வாரிப் பூசும் வேலையை ஸ்டாலின் செய்துள்ளார்.

அதிமுகவினர் மீது புனையப்பட்ட வழக்குதான் உள்ளது 

தி.மு.க. அமைச்சர்கள் உட்பட பலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இலாக்கா இல்லாத மந்திரியாகவே ஒரு நபர் ஜெயிலில் இருக்கிறார். அமலாக்கத் துறை வழக்குகள் மற்றும் ரெய்டுகள் பல திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உள்ளது. மேலும், இவர்கள் மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், அதே சமயத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு பெற்றிருந்த போதே, இவர்கள் மீது CBI வழக்குகள் இருந்ததை திமுக தலைவர் வசதியாக மறந்துவிட்டார் போலும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மீதும் விடியா திமுக அரசின் ஏவல் துறையால் புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்குகள்தான் உள்ளனவே தவிர, மத்திய அமலாக்கத் துறை வழக்குகள் ஏதும் இல்லை.

கண்டனம்

திருவிழா கூட்டத்தில் திருடிக்கொண்டு ஓடுபவன், திருடன் திருடன் என்று கத்திக் கொண்டே ஓடுவான். அதுபோல் 26.7.2023 அன்று, திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மேல் உள்ள, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றம் பற்றி விசாரிக்கும் அமலாக்கத் துறையின் வழக்குகளை மறைக்க, எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி எங்களைப் பற்றி அவதூறாகக் கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தன்மை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறுதல் போன்றவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தும்; கடும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியும், வாக்களித்த தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.