Tamil News
Tamil News
Thursday, 27 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கில் அரசு தரப்பு வாதம் செய்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வந்தார்.

புழல் சிறையில் செந்தில்பாலாஜி

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு வழக்கு தொடர்ந்தார். ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்துவந்த நிலையில், கடந்த ஜூலை 14-ம் தேதி மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 17-ம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். 

இலாகா இல்லாத அமைச்சர்

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வந்ததையடுத்து, அவர் வகித்து வந்த துறை அமைச்சர் முத்துசாமிக்கும், தங்கம் தென்னரசுவிற்கும் அளிக்கப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

அமைச்சராக நீடிக்க தகுதியில்லை

தமிழக அரசின் இந்த  முடிவை எதிர்த்து தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி வழக்கறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஜூலை 21-ம் தேதி தலைமை அமர்வு நீதிபதி முன்பு வந்தது. அப்போது முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தரப்பு வழக்கறிஞர், "ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? அமைச்சராக நீடிக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டார் என்றும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கலாம், அமைச்சராக நீடிக்க முடியாது. இதுபோன்ற வழக்கு நாட்டில் முதல்முறை எனவும்,  வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார். மேலும், செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் கூறியிருக்கிறார்.  அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது" என்று வாதிட்டார். 

எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்?

இதையடுத்து, செந்தில்பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்றும், நீக்கத்துக்கு பிறகு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் ரவி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும் போது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? என  கேள்வி எழுப்பினார். அத்துடன் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகளில், தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்களுக்காக வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தனர். 

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று ஜூலை 28 மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ஆளுநரோ, குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என்று அரசியல் சட்டம் தெரிவிக்கிறது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு வாதிட்டார். 

எம்.எல்.ரவி தரப்பு வழக்கறிஞர் வாதம்

அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளதாகவும், அதுபோன்ற சூழல் நிலவுகிறதா இல்லையா என பார்க்க வேண்டும் என எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல் பதில் வாதம் முன்வைத்தார். 

ஜெயவர்தன் தரப்பு பதில் வாதம்

ஜெயவர்த்தன் தரப்பில் பதில் வாதம் செய்த மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது. தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது என வாதிட்டார்.

ஒத்திவைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.