Tamil News
Tamil News
Friday, 28 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் கொடுஞ்செயல்

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2013ஆம் ஆண்டு நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் அதனை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் எடுக்காதது உழைக்கும் தொழிலாளர்களின் குருதியைக் குடிக்கும் கொடுஞ்செயலாகும்.

பரிதாபகரமாக உள்ளது

இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் சீரிய முயற்சியாலும் 1956ஆம் ஆண்டு, தோற்றுவிக்கப்பட்டது. தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற ஈகத்தாலும் உருவான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தொடங்குவதற்காக, தங்கள் சொந்த நிலங்களை முழுவதுமாக விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடித் தமிழர்களின் நிலை மட்டும் இன்றுவரை பரிதாபகரமாக உள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடு

நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் தற்போது அடிமாட்டுக்கூலிகளாக, ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே வேலைசெய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, வடவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் வடவர்களே நியமிக்கப்பட்டு, மண்ணின் மைந்தர்கள் இல்லாத சூழல் உருவாகி வருகிறது. நிலக்கரி எடுக்க நிலம் வழங்கிய தமிழ்க் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், ஒப்பந்தப்படி இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களைப் பணியில் சேர்க்காமலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்ற என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடுமிக்கச் செயல்பாடானது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

எந்த ஒரு நிறுவனமும் சட்டத்திற்கு மேலானது கிடையாது

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய நிலக்கரி நிறுவன நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறது. ஒரு தொழிலாளி, ஒரு ஆண்டில் 240 நாட்கள் பணியாற்றினாலே அவரை நிரந்தரப் பணியாளராக்க வேண்டும் என்று தொழிலாளர் சட்டம் கூறும் நிலையில், 2013 ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகளைக் கடந்த பிறகும்கூட, நீதிமன்றத் தீரப்பையே மதிக்காமல் ஒப்பந்த தொழிலாளர்களை நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஏமாற்றி வருகிறது. 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “ஒப்பந்த முறையைக் கேடயமாகப் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சி, புதிய பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், தாராளமயம், உலகமயம், என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பினைச் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எந்த ஒரு நிறுவனமும் சட்டத்திற்கு மேலானது கிடையாது” என்றும் தீர்ப்பளித்துள்ளது.

ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உறுதிப்படுத்த வேண்டும்

ஆகவே, தமிழர்களின் நிலத்தையும், வளத்தையும், உடல் உழைப்பையும் உறிஞ்சி ஆண்டிற்கு 2378 கோடி நிகர இலாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இந்திய ஒன்றிய அரசும், நெய்வேலி நிறுவனத்தில் 5 விழுக்காடு பங்கினைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசும் ஒப்பந்த தொழிலாளர்களை விரைந்து பணி நிரந்தரம் செய்வதையும், அதுவரை நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.