Tamil News
Tamil News
Sunday, 30 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

என்.எல்.சி.கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தநிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.   

விளைநிலங்கள் நாசம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வளையமாதேவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் இராட்சத வாகனங்கள் மூலம் நெற்பயிர்களை அழித்தது என்.எல்.சி. நிர்வாகம். என்.எல்.சி.விரிவாக்க பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில் விளைநிலங்களை நாசம் செய்தது  என்.எல்.சி. நிர்வாகம்.  என்.எல்.சி. நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி!

இதையடுத்து, என் எல் சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி.நிர்வாகத்திடம் நீதிபதி தண்டபாணி சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.    

நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி எம்.தண்டபாணி வேதனை தெரிவித்தார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை என வருத்தம் தெரிவித்த நீதிபதி, பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா? என கேள்வி எழுப்பினார்.

விசாரணைக்கு ஏற்பு

இந்தநிலையில், என்.எல்.சி.கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நிலம் கையகப்படுத்தல் சட்டப்பிரிவு 101-ன் படி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வழக்கை அவரசர வழக்காக எடுத்து கொள்ளவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு முறையீடு செய்தார். பின்னர், பிற்பகல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.