Tamil News
Tamil News
Sunday, 30 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

பேசுபொருளான மணிப்பூர் விவகாரம் 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிகழ்ந்த துயர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிகுள்ளாகியது. இரு வேறு சமூகங்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் கலவரத்தில் முடிந்தது. இதில், அம்மாநிலத்தில் பல உயிர்கள் பலியான நிலையில், பொது இடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையின் போது பழங்குடியின பெண்கள் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

மணிப்பூர் சென்ற I.N.D.I.A கூட்டணி 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். மேலும்,  பிரதமர் நேரில் செல்லாதது குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே I.N.D.I.A கூட்டணிக் கட்சியின் எம்.பிக்கள் மணிப்பூர் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர். 

கடுமையாக சாடிய நிர்மலா

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் முதன்மைப்படுத்தப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் மீண்டும் கூடிய நிலையில், பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார். 

முதலைக் கண்ணீர்...

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள்  விரும்பவில்லை என்றும், இன்று இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது, ​​எதிர்க்கட்சியினர் வெளியே சென்றுவிட்டதாக சாடினார். மேலும், மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு வெறும் அரசியல் பிரச்னை மட்டுமே என குற்றம்சாட்டிய அவர், மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உண்மையாக மணிப்பூர் மீது அக்கறை கொண்டிருந்தால் அதை பற்றி விவாதித்திருப்பார்கள் என்றும் பேசியுள்ளார்.