Tamil News
Tamil News
Sunday, 06 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

என்.எல்.சி-க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடை முடிந்ததும் நிலத்தை என்.எல்.சி-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், புதிதாக நிலத்தில் பயிரிடக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

விளைநிலங்கள் நாசம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வளையமாதேவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் இராட்சத வாகனங்கள் மூலம் நெற்பயிர்களை அழித்தது என்.எல்.சி. நிர்வாகம். என்.எல்.சி.விரிவாக்க பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில் விளைநிலங்களை நாசம் செய்தது  என்.எல்.சி. நிர்வாகம்.  என்.எல்.சி. நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தநிலையில், என்.எல்.சி.கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலம் கையகப்படுத்தல் சட்டப்பிரிவு 101-ன் படி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பிரமாண மனு தாக்கல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு என்.எல்.சி-க்கு  உத்தரவிட்டார். அதேபோல், அறுவடைக்குப் பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றம் ஏற்க கூடாது

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று (ஆக-07) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 88 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை கோருவதை நீதிமன்றம் ஏற்க கூடாது என வாதிட்டார்.

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வழங்கப்படும்

அதையடுத்து தமிழக அரசு சார்பில், கருணை தொகை வழங்குவதற்கு கிராமங்களில் அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகையானது செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வழங்கப்படும். விவசாயிகள் அறுவடை முடிந்ததும் தங்களின் நிலங்களை என்.எல்.சி-யிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

அறுவடை முடிந்ததும் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, என்.எல்.சி-க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடை முடிந்ததும் என்.எல்.சி-யிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். புதிதாக நிலத்தில் பயிரிடக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முடித்து வைத்தார்.