Tamil News
Tamil News
Thursday, 10 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

தேசிய அரசியலின் வரலாற்றை தமிழக அரசியல் களத்தை குறிப்பிடாமலோ, தமிழக அரசியல் தலைவர்களை தவிர்த்துவிட்டோ இந்திய அரசியலை எழுத முடியாது என்பது தவிர்க்க முடியாத உண்மை. அப்படி, தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் பங்கும், தமிழ்நாட்டு தலைவர்களின் பங்கும் அளப்பரியது. காமராஜர் காலம்தொட்டு இன்றைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரையிலும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தமிழ்நாடு அரசியல் களம் பார்க்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் காமராஜர், அண்ணா, கலைஞர் போன்றோர் தேசிய தலைமையையே தீர்மானித்தனர் என்றால் மிகையில்லை. அப்படி, இன்றைய தேசிய அரசியல் களத்தில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் அதிகம் இடம் பெற்றிருக்கிறது என்றாலும் மிகையில்லை. அப்படித்தான், தற்போதைய ஆளும் பாஜக அரசு தேசிய அரசியலை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தென்மாநில என்.டி.ஏ.கூட்டணியின் முக்கிய பொறுப்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், திமுக அரசின் செயல்பாடுகளை நாடாளுமன்ற அவைகளில் தொடர்ந்து பேசி வருவதும், தேசிய அரசியலில் தமிழ்நாடு முக்கியத்துவம் பெறுகிறது மற்றும் திமுக அரசின் பார்வை தேசிய அளவில் பார்க்கப்படுகிறது என்றால் இதன் வரலாறுகளை சற்றே திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு எத்தனையோ தலைவர்களையும், அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கி இருக்கிறது. அதில், எல்லோரும் வரலாற்றிலும் மக்கள் மனதிலும் இடம் பிடிப்பதில்லை. அப்படி மக்கள் மனதிலும் வரலாற்றிலும் இடம் பிடித்தவர்கள் தான் காமராஜரும்.. எம்.ஜி.ஆரும்.. அப்துல் கலாமும்.. இவர்களின் அரசியலும், அறிவியலும் இன்றும் நாடாளுமன்ற அவைகளில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அவர்கள் தேசிய அரசியலில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை உணர முடிகிறது. இவர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டை ஆண்ட கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தேசிய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும் வரலாறு அதை மறைக்காது.. மறுக்காது.. இப்படி, தேசிய அரசியலில் அன்று தொட்டு இன்று வரையிலும் தமிழ்நாடு முக்கியத்துவம் பெற்றே வருகிறது.             

இவர்களின் நீட்சியாகத்தான் இன்று தேசிய அரசியலில் ஆளும் பாஜக அரசின் முக்கிய அங்கமாக அதிமுகவும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக திமுகவும் செயல்பட்டு வருகிறது. ஆளும் பாஜக அரசு 9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து 10-வது ஆண்டில் அடியெடுத்து செயல்பட்டு வருகிறது. இவர்களின் அடுத்த நோக்கம் 10 ஆண்டையும் நிறைவு செய்து, எப்படியாவது 11-வது ஆண்டிலும் அதாவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் இந்த ஆளும் விரோத பாஜக அரசை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவிடாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது எதிர்க்கட்சிகள். ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டை முதன்மைப்படுத்தி வருவதும், தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திவரும் திமுக அரசை அச்சுறுத்தியும் விமர்சித்து வருவதும் தமிழ்நாட்டை பிடிப்பதற்குத்தான் என்றெல்லாம் மூத்த பத்திரிக்கையாளர்கள் பேசி வருகிறார்கள்.

திமுக 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு தான் பாஜக அரசு தமிழ்நாட்டின் மீதான பார்வையை சற்றே அகலப்படுத்தியது எனலாம். அதே நேரத்தில் திமுக மீதான விமர்சனங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் பாஜகவின் மீதான பார்வையை அகலப்படுத்திக்கொண்டது என்றே சொல்லலாம். தமிழ்மொழி, தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு என பாஜக தலைவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழ்நாட்டின் பெருமையை பேசி பேசி தமிழர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பையும் பெற்று வந்தது பாஜக அரசு. இன்னொரு பக்கம் திமுக அரசிற்கு குடைச்சல் கொடுப்பது, விமர்சனங்களை முன்வைப்பது, அரசு இயந்திரங்களை பயன்படுத்தி அரசை அச்சுறுத்துவது என பாஜக அரசு தமிழ்நாட்டில் ஒரு எதிர்க்கட்சி போலவே செயல்பட்டு வந்தது. இன்னொரு பக்கம் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் முக்கிய அங்கமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வைத்துக்கொண்டது என தமிழ்நாட்டில் தடம் பதிக்க எல்லாவிதமான வேலைகளையும் செய்து வந்தது பாஜக அரசு. இதுமட்டுமல்ல, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதாகக்கூட பேச்சுக்கள் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.   

இப்படி ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டை குறிவைத்து செயல்பட்டு வரும் வேளையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாடாளுமன்ற அவைகளில் தமிழ்நாடு பற்றியும், குறிப்பாக திமுக பற்றியும் அதிகம் பேசப்பட்டு இருந்தது பெரும் பேசுபொருளாக மாறியது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தான் கடந்த ஆக-08,09 ஆகிய தேதிகளில் நடந்து வந்தது. அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அதிகம் பேசப்பட்டது தமிழ்நாடு, தமிழ் மற்றும் திமுக பற்றியான விவாதம் தான் பாஜக எம்.பி.க்களால் அதிகம் பேசப்பட்டது. இதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான பதிலுரை பிரதமர் மோடி வழங்கும்போதுகூட, மணிப்பூரைப் பற்றி பேசியதைவிட தமிழ்நாடு, திமுக மற்றும் காங்கிரஸ் பற்றித்தான் அதிகம் பேசியிருந்தார்.            

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி என பாஜக எம்.பி.க்கள் அனைவராலும் அதிகம் பேசப்பட்டது தமிழ்நாடு பற்றியும், திமுக பற்றியான விமர்சனமும் தான். இதன்மூலம் தேசிய அரசியலில் தமிழ்நாடு மற்றும் திமுக அரசு முக்கியத்துவம் பெற்றதாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இப்படி, காலம் காலமாக தேசிய அரசியலில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கியத்துவம் பெற்றே இருந்து வந்தார்கள். ஆனால், தற்போது மக்களவையிலும் பொதுவெளியிலும் பாஜகவினர் தமிழ்நாடு பற்றியும் திமுக பற்றியும் பேசிவருவது உலக அரங்கில் முக்கியத்துவம் பெறும். அதேநேரம், மாநில கட்சிகளோ, மாநில தலைவர்களோ தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றாலும்கூட, அரசியல் களத்தில் குறிப்பாக மாநில அரசியலிலும் சரி, தேசிய அரசியலிலும் சரி யார் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...